Crime: அப்பாவுக்கு குட் பை சொல்லு - 3 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தாய் தற்கொலை! விசாரனையில் அதிர்ச்சி
Crime: அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, உங்களது மகனுக்கு குட்பாய் சொல்லுங்கள் என தனது முன்னாள் கணவருக்கு அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
மகனை கொன்று தாய் தற்கொலை:
அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அரங்கேறியது. இதுதொடர்பான விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, உயிரிழந்தவர்கள் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32) மற்றும் அவரது மகன் கேடன் (வயது 3) என்பது தெரிய வந்துள்ளது.
திருமண வாழ்வில் பிரச்னை:
திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கிரிகர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தனித்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி கிரிகர் தனது முன்னாள் கணவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு வீட்டில் யாரும் இல்லாததை கண்டதும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்ற அவர், ஆத்திரத்தில் அங்கிருந்த தனது திருமண புகைப்படங்களை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த தனது மகன் கேடனை அழைத்துச் சென்றுள்ளார்.
”அப்பாவுக்கு குட்பாய் சொல்லு”
இதையடுத்து தனது முன்னாள் கணவரை தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வியுற்றதால், செல்ஃபோனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “இப்போது வீட்டிற்குச் செல்ல உங்களுக்கு எதுவும் இல்லை. மேலும் நாள் முடிவில் உங்களிடம் எதுவும் இருக்காது" என கிரிகர் தெரிவித்துள்ளார். பிறகு சான் ஆன்டனியோ பகுதியில் உள்ள பூங்காவுக்கு மகனுடன், காரில் சென்றுள்ளார். அங்கிருந்து தனது முன்னாள் கணவரை செல்ஃபோன் மூலம் மீண்டும் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இதையடுத்து, ”உங்கள் மகனுக்கு குட்பாய்” சொல்லுங்கள் என அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும், ”உனது அப்பாவுக்கு குட்பாய் சொல்லு, அவர் இங்கு இல்லாததற்கு மன்னித்துக் கொள் என கூறி தனது மகனுக்கு முத்தமிடும்” வீடியோ ஒன்றையும் கிரிகர் பதிவு செய்துள்ளார்.
பூங்காவில் தற்கொலை:
தொடர்ந்து தனது மகனை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னைத் தானே தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, மார்ச் 19ம் தேதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பூங்காவில் இருந்து கிரிகர் மற்றும் கேடனின் உடலையும், அங்கிருந்த செல்ஃபோனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், கிரிகரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களின் உறைகள், அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கிக்கான தோட்டாக்களின் உறைகளுடன் சரியாக பொருந்தியுள்ளன. எனவே இது தற்கொலை தான் என்பது உறுதியாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.