போர் முடிவு பெற்றது... ஆப்கானிஸ்தான் இனி இஸ்லாமிக் அமிரகம்... தலிபான்கள் அறிவிப்பு!
உலக நாடுகள் தங்களை கைவிட்டுவிட்டதாக ஆப்கானிஸ்தான் மக்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தலிபான்கள் நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகமாறியது. அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில் தலிபான்கள் வசம் ஆட்சிப் பொறுப்பு சென்றது. இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளதாக அல்ஜசீரா ஊடகன் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுத் தூதர்கள் வெளியேறினர். தூதரகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றிவிட்டதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகள் தங்களை கைவிட்டுவிட்டதாக ஆப்கானிஸ்தான் மக்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதால், காபூல் நகருடனான விமான போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துவிட்டன. ஆப்கானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். இதனிடையே, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று மதியம் மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது. நேற்று மாலை 129 பேர் இந்தியா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்கள் முயற்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பெயரை இஸ்லாமிக் அமிரகம் என மாற்றியிருப்பதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தலிபானின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் அல் ஜசீராவிடம், தனித்தனியாக வாழ விரும்பவில்லை என்றும் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தின் வகை மற்றும் வடிவம் விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், முகமது நயீம் அமைதியான சர்வதேச உறவுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
"கடவுளுக்கு நன்றி, நாட்டில் போர் முடிந்துவிட்டது."நாங்கள் தேடியதை அடைந்துள்ளோம். இது நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் நமது மக்களின் சுதந்திரம். யாரையும் குறிவைத்து எங்கள் நிலங்களைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம், மற்றவர்களுக்கு தீங்கு செய்ய நாங்கள் விரும்பவில்லை” என்றும் கூறினார்.
முன்னதாக, கடந்த, மே மாதத் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் பல மாவட்டங்களை தலிபான் கைப்பற்றத் தொடங்கியது. தற்போது, நாட்டின் 220க்கும் அதிகமான மாவட்டங்கள் தற்போது தலிபான் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. நாட்டின் 15 மாகாணாங்களின் தலைநகரங்கள் தற்போது தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹெராத், சர்-இ-புல், குண்டூஸ், ஷேபர்கான், நிம்ரோஸ் மாகாணத் தலைநகர் ஸ்ராஞ், கந்தஹார், ஹெராத் உள்ளிட்ட முக்கிய தலைநகரங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பின் உச்சகட்ட சம்பவமாக, இரு தினங்களுக்கு முன்பாக குண்டூஸ் மாகாணத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்தை தாலிபான் கைப்பற்றியது. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள், துப்பாக்கி கருவியை தலிபான் படைகளிடம் ஒப்படைத்து சரணடையும் வீடியோ சமூக ஊடகங்களில் பேசும் பொருளானது.