Vladimir Putin: சிதறி கிடந்த உணவு.. தரையில் படுத்திருந்த புதின்.. ரஷ்ய அதிபருக்கு என்னாச்சு? தொடரும் மர்மம்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
Vladimir Putin: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
புதினின் உடல்நிலை:
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் அதிபராக விளாடிமிர் புதின் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உடல்நில குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணமே இருக்கும். அதாவது, உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, புதினின் உடல்நிலை மோசம் அடைந்ததாக பல தகவல் வெளியாகின. புதினுக்கு புற்றுநோய் அல்லது பார்கின்சன் நோய் இருக்கலாம் செய்தி வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு, பொது நிகழ்ச்சிகளிலும் அதிகாரப்பூர்வ சந்திப்புகளிலும் புதின் நடுங்குவது போன்றும் வழக்கத்திற்கு மாறாக அவரது கால் ஆடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின.
மேலும், தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வந்ததால், ஊசி போட்ட இடங்களில் தடங்கள் இருப்பது என்றெல்லாம் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், ரஷ்ய அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. புதினின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
புதினுக்கு மாரடைப்பா?
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய டெலிகிராம் சேனலான ஜெனரல் எஸ்.வி.ஆரை மேற்கோள் காட்டி, செய்திகள் வெளியாகின. அதாவது, கடந்த ஞாயிற்றுக் கிழமை புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த டெலிகிராம் சேனலின் அறிக்கையின்படி, ”ரஷ்ய அதிபர் புதின் அறையில் இருந்து ஞாயிற்று கிழமை இரவு 9 மணியளவில் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக புதினின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, புதின் தரையில் படுத்தப்படியே இருந்துள்ளார். அங்கு அவர் படுக்கைக்கு அருகில் இருந்த மேஜை கவிழ்ந்து கிடந்தது. மேலும், அவர் சாப்பிட்டு வைத்து பானம் மற்றும் உணவும் சிதறிக் கிடந்துள்ளது.
புதின் விழுந்தபோது, அவர் மேஜையில் பட்டு தரையில் விழுந்திருக்கக் கூடும். அவர் விழுந்த சத்தத்தை கேட்டு தான் பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருக்கின்றனர். பின்னர், அதிபர் புதின் அவரது அறையில் இருந்து பிரத்தியேகமான அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிசிக்சை அளித்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், புதின் சுயநினைவு பெற்றார்" என்று சேனல் கூறியுள்ளது. மேலும், அதிபர் புதினின் உடல்நிலையை மருத்துவர்களும் அதிகாரிகளும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் மாளிகை சொல்வது என்ன?
புதினின் உடல்நிலை பாதிப்பு பற்றி ரஷ்ய அதிபர் மாளிகை இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதை மறுக்கவும் இல்லை. கடந்த காலங்களில் கூட புதினின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியாகும் நேரத்தில், அதிபர் மாளிகை மவுனம் காத்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து புதின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.