Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
எதுவுமே தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொல்வார்கள். அதுபோல, பாகிஸ்தானில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்த உடன் தான், அமைதிப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று கதறுகிறார் அந்நாட்டின் பிரதமர்.

பாகிஸ்தான் இதுவரை தீவிரவாதிகளை இந்தியா மீது ஏவிவிட்டு, ஜாலியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்து வந்தது. ஆனால், பஹல்காம் சம்பவத்திற்கு வாங்கிய பதிலடி, அந்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. அது, தாக்குதல் மட்டுமல்ல, சிந்து நதிநீரை நிறுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளாலும் தான். இதனால், பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்ற அச்சத்தில், தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனறு கதறி வருகிறார், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப்
பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பலமான பதிலடி
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருப்பது தெரிந்த உடன், இந்தியா கொடுத்த முதல் பதிலடி தரமானது. அதாவது, ஆயுத தாக்குதலை விட கொடியது. ஆம், பாகிஸ்தானின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், அமைதியாக இந்தியா அடித்த அடி, பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது.
அதாவது, பாகிஸ்தானின் முக்கிய நீர் ஆதாரத்திற்கு வழிவகுக்கும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதுதான், இந்தியாவின் முதல் பதிலடியாக இருந்தது. ஏனெனில், இந்த தண்ணீர் தான், பாகிஸ்தானின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக முக்கிய ஆதாரம். சிந்து நதிநீர் கிடைக்காவிட்டால், பாகிஸ்தானில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் நீராதாரம் பாதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதன் மூலம், பாகிஸ்தானுக்கு கிடைக்கும் 80 சதவீத தண்ணீர் நிறுத்தப்படும்.
குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும். மேலும், பாகிஸ்தானின் கிராமப்புற மக்களில் 68 சதவீதத்திற்கான நீர் ஆதாரமாக சிந்து நதி நீர் திகழ்கிறது. அதோடு, இந்த தண்ணீரின் மூலமே, பாகிஸ்தானின் 3 மில்லியன் ஏக்கர் பரப்பிலான விவசாயம் பயன் பெறுகிறது. இந்த நீர் தடைபட்டால், பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயமே காலியாகிவிடும்.
நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதால் பேச்சுவார்த்தைக்கு கதறும் பாகிஸ்தான்
இந்த நிலையில், ஆயுத தாக்குதலைவிட, பாகிஸ்தானிற்கு செல்லும் நீரை நிறுத்தியதுதான் இந்தியாவின் தரமான பதிலடியாக கருதப்படுகிறது. இதனால்தான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், இந்தியாவிடம் அமைதிப் பேச்சுவாத்தை நடத்த வேண்டும் என கதறி அழுதுகொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இந்தியாவிற்கு பல தூதுகளை விட்ட நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது காஷ்மீர் விவகாரமாக மட்டும்தான் இருக்கும் என இந்தியா கெத்து காட்டிவிட்டது. இதனால் ஆடிப்போன பாகிஸ்தான், தற்போது பல்வேறு நாடுகளிடம் உதவிகளை கேட்டு வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் ஈரான் நாட்டிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷரிஃப், அங்கு டெஹ்ரானில், ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியனை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத நிலைகளின் மீது நடத்திய தாக்குதல் பற்றி பேசியுள்ளார். மேலும், மோதலின்போது ஈரானின் நேர்மறையான நிலைப்பாட்டை ஷரிஃப் பாராட்டினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார் ஷெபாஷ் ஷரிஃப். காஷ்மீர் உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகள், நீர் பகிர்வு, வர்த்தகம் ஆகியவற்றுக்கு தீர்வு காணவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதில் கவனிக்கவேண்டிய விஷயமாக அவர் கூறியது, தண்ணீர் பகிர்வில் அமைதியான தீர்வு காண்பதற்காகவே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்பதுதான். அதோடு, வர்த்தகத்தை மேம்படுத்தவும், தீவிரவாதத்தை எதிர்த்து சமாளிக்கும் விஷயம் குறித்தும் பேசலாம் என அவர் கூறினார்.
நாங்கள் அமைதியையே விரும்பினோம், இப்போதும் விரும்புகிறோம் எனவும், ஒரே மேஜையில் அமர்ந்து, இரு நாடுகளுக்குமிடையே நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசலாம் என்றும் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தார். மேலும், என்னுடைய அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா ஏற்றுக்கொண்டால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புவதை தீவிரமாக அவர்களுக்கு உணர்த்துவோம் என கூறியுள்ளார் ஷரிஃப்.
இதன் மூலம், தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை உணர முடிகிறது. காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசலாம் என ஷெபாஸ் ஷரிஃப் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா தற்போது என்ன பதில் தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















