North Korea: உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
ரஷ்யாவுக்கு உதவும் வகையில் வட கொரிய மேலும் 6 ஆயிரம் வீரர்கள் கொண்ட துருப்பை அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உக்ரைனுக்கு கவலையை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உக்ரைனுடனான போரில் சேதமடைந்துள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மறு கட்டமைக்க, 6 ஆயிரம் பேரை அனுப்ப வட கொரியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உக்ரைன் கலக்கமடைந்துள்ளது.
பொறியாளர்கள், ராணுவ ஊழியர்களை அனுப்பும் வட கொரியா
உக்ரைன் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், அந்த பகுதியை மீண்டும் கட்டமைப்பதற்காக, பொறியாளர்கள் மற்றும் ராணுவ ஊழியர்கள் அடங்கிய 6,000 பேர் கொண்ட துருப்பை ரஷ்யாவுக்கு அனுப்ப வட கொரியா முடிவு செய்தள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா செயல்பட்டு வருகிறது. அதோடு, அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள், ரஷ்ய வீரர்களுடன் இணைந்து போர் புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை சீரமைக்கும் பணியில் அந்நாட்டிற்கு உதவும் வகையில், 1,000 ராணுவ பொறியாளர்கள் மற்றும் 5,000 ராணுவ ஊழியர்களை அனுப்பி வைக்க உள்ளது வட கொரியா.
இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ரஷ்ய அரசு, உக்ரைன் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை அவர்கள் கட்டமைப்பார்கள் என்றும், இந்த போரில் உயிரிழந்த வட கொரிய வீரர்களை போற்றும் வகையில், அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனுடன் போரிட்டு இறந்த 6,000 வட கொரிய வீரர்கள்
சமீபத்தில், இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவத்துடன் நடந்த சண்டையில், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு படைகளைச் சேர்ந்த 6000-த்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில், குர்ஸ்க் பகுதியில் 11,000 வடகொரிய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குறைந்த எண்ணிக்கை அடங்கிய கூடுதல் படைகளை வடகொரியா குர்ஸ்க் பகுதிக்கு அனுப்பியதாகவும், உக்ரைன் நடத்திய பெரிய அளவிலான தாக்குதல்களிலேயே அதிக வடகொரிய வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குர்ஸ்க் பகுதியைத் தவிர, வேறு எங்கும் வடகொரிய படைகள் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வராத ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்றுவரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற முயற்சிகள் அனைத்தும் தோல்விலேயே முடிந்தன.
இருநாட்டு தலைவர்களும் விடாப்பிடியாக இருப்பதுதான் அதற்கு காரணமாக கூறப்படுகிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைத்த, ட்ரம்ப் ஒரு தூதரை நியமித்து, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், அது பலனளிக்காமல் போனது.
எனினும், உக்ரைனை மிரட்டி, எப்படியோ கனிம ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவுக்கு, சீனா, வட கொரியா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.





















