North Korea in War: இந்தா.. இறங்கிடுச்சுல்ல வட கொரியா.. இனி எங்க போர் முடியறது.?!!
உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக, வட கொரியா தனது படை வீரர்களை அனுப்பியதை அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில், ரஷ்யாவிற்கு உதவும் வகையில், தனது படைகளை அனுப்பியதாக, வட கொரியா முதன் முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
3 வருடங்களுக்கு மேலாக தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்
கடந்த 2022-ம் அண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியது ரஷ்யா. அதைத் தொடர்ந்து, உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின், உக்ரைனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடிய ட்ரம்ப், போர் நிறுத்தத்தை அவர் விரும்பவில்லை என குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டிவரும் ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஸ்டீவ் விட்காஃபை தூதராக நியமித்து, சவுதி அரேபியாவில், இரு நாட்டு பிரதிநிதிகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் போரை எதிர்கொண்டுவரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரில் ரஷ்யாவிற்கு வடகொரிய வீரர்களும் உதவி செய்வதாக புகார் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவிற்கு படைகள் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த வட கொரியா
இந்த சூழலில், ரஷ்யாவிற்கு படை வீரர்களை அனுப்பியதாக, வட கொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வட கொரிய மத்திய ராணுவ ஆணையம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் இடையே, கடந்த 2024 ஜூன் மாதத்தில் போடப்பட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா அதன் குர்க் பகுதியை உக்ரைனிடமிருந்து மீட்க உதவும் வகையில், தங்கள் படைகளை அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
ஆனால், எத்தனை படை வீரர்கள் அனுப்பப்பட்டனர் என்பது குறித்தோ, அதில் ஏதோனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், வட கொரியாவின் எதிரியான தென் கொரியா, முன்னதாக, ரஷ்யாவிற்கு 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் படை வீரர்களை கடந்த ஆண்டு வட கொரியா அனுப்பியிருக்கலாம் என கணக்கிட்டுள்ளது. அதில், சுமார் 4,000 வீரர்கள் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருக்கலாம் என்றும் தென் கொரியா கூறியுள்ளது. அதேபோல், இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூடுதலாக 3,000 படை வீரர்களை வட கொரியா அனுப்பியதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
யாரிடம் உள்ள ரஷ்யாவின் குர்க் பகுதி.?
குர்க்கின் பல பகுதிகள் தங்கள் வசம் உள்ளதாக உக்ரைன் படைகள் கூறிவரும் நிலையில், வட கொரிய படைகளின் உதவியுடன், குர்க் பகுதியை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. வட கொரிய வீரர்கள் தொழில்முறையாக, துணிவுடனும், தைரியத்துடனும், வீரமாக போரிடுவதாக, ரஷ்ய தலைமை அதிகாரி வலேரி ஜெராசிமோவ் கூறியுள்ளார்.
மறுபுறம், குர்க் பகுதியில் ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்துவருவதாக உக்ரைன் படைகள் கூறியுள்ள நிலையில், ரஷ்ய பகுதியில் தங்கள் இருப்பு உள்ளதாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நிலைமை இப்படி இருக்க, ஒருபுறம் இரு நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்துள்ளது. வட கொரியா ஏற்கனவே போர் வெறி கொண்டவர்கள். அவர்கள் ரஷ்யாவுடன் இணைந்திருக்கும் போது, போர் எங்கே முடிவுக்கு வருவது என பலரும் கருதுகின்றனர்.






















