Newyork Earthquake: துருக்கி பேரழிவு.. இப்போது அமெரிக்காவையும் விட்டுவைக்காத நிலநடுக்கம்.. என்ன நடக்கிறது?
தென் கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து, அமெரிக்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென் கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து, அமெரிக்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு முதற்கட்டமாக மேற்கு செனிகாவின் புறநகர்ப் பகுதியான பஃபலோவிற்கு கிழக்கே மையம் கொண்டு காலை 6:15 மணியளவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு நிபுணர் யாரேப் அல்டவீல் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கமானது சில வினாடிகள் நீடித்தது என்று ஊடங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்கா நியூயார்க் நகரிலுள்ள ஃபப்பல்லோ அருகே 3.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பதிவான ரிக்டர் அளவானது, அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் பதிவான வலுவான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.
Rare 3.8 magnitude earthquake hits upstate New York, Buffalo region. Home security camera video: pic.twitter.com/bcYMKm9zeD
— Mike Sington (@MikeSington) February 6, 2023
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு வெளியிட்ட அறிக்கையில், “ 3.8 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் நியூயார்க் மேற்கு செனிகாவில் இருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கில் சுமார் 1.24 மைல் தொலைவில் காலை 6.15 மணியளவில் 1.86 மெயில் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கனடாவின் தெற்கு ஒன்ராறியோவில் லேசாக உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பது சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய பூகம்பம் இல்லை. கடந்த 1983 ம் ஆண்டு முதல் செனிகா பகுதியில் 2.5 ரிக்டர் அளவுக்கு மேல் சுமார் 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 4,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் இடிபாடுகளைத் தேடி வருகின்றனர். தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
துருக்கி- சிரியா நிலநடுக்கம்:
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியை தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து தரைமட்டமாகின. சிரியாவில் பாதிப்பு சற்றே குறைவாக இருந்தாலும், துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மட்டுமின்றி, அந்நாட்டில் இருந்த 2,200 ஆண்டுகள் பழமையான காசியண்டெப் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலிது லெபனான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. தற்போது வரை இரு நாடுகளிலும் சேர்த்து ஆயிரத்து 4000-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மூன்று நிலநடுக்கம்:
காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பிற்பகலிலும், ரிக்டர் அளவில் 7.6 என்ற அளவிலான மேலும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நிலநடுக்கத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில், நிலநடுக்கதால் துருக்கியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. பொருளாதார இழப்புகள் 1 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம், இது துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை இருக்கும் என்றும் அறிக்கை மதிப்பிடுகிறது.
பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன?
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். கட்டடங்களில் இருந்து உடனடியாக வெளியேற முடியாததால் பலி எண்ணிக்கை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து தொடர்ந்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன?
அனடோலியன் தட்டில் அமர்ந்திப்பதால், நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக துருக்கி உள்ளது. யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ள துருக்கியை, ஒரு பெரிய நிலநடுக்கம் அழிக்கும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். ஆனாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமல், பரவலான கட்டடங்களை துருக்கி அரசு அனுமதித்துள்ளது.
இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்:
கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 17 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகினர். 2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக, 2011ஆம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் பேர் பலியாகலாம் என அமெரிக்கா கணித்துள்ளது. இதன் மூலம், துருக்கியின் இரண்டாவது மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகலாம்.