Russia Ukraine War | ரஷ்யா- உக்ரைன் போருக்கு நேட்டோதான் காரணமா?- யார் இந்த நேட்டோ?
ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோவின் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. இரு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான போரில், அமெரிக்காவின் நேட்டோ பங்கு என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோவின் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. இரு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான போரில், அமெரிக்காவின் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பான நேட்டோவின் பங்கு என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு நேட்டோ என்றால் என்ன என்று முதலில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் சரணடைந்த பிறகு, உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1945 வாக்கில் அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் வல்லரசு நாடுகளாகின. இதையடுத்து சோவியத் ஒன்றியம், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியது.
இதற்கு பதிலடியாக 1949-ல் அமெரிக்கா, நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பை (North Atlantic Treaty Organization - NATO) உருவாக்கியது. இதில், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்தன. இதன் தலைநகரம் பெல்ஜியம், ப்ரஸில்ஸில் அமைக்கப்பட்டது.
இந்த நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவப் பாதுகாப்புக்காக, சர்வதேச ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது நேட்டோ வாஷிங்டன் ஒப்பந்தம் பிரிவு 5-ல் தெளிவாக வரையறுக்கப்பட்டது.
உறுப்பு நாடுகளுக்கு ராணுவ உதவி
அதாவது நேட்டோவில் இணைந்துள்ள நாடுகளின்மீது பிற அந்நிய நாடுகள் படையெடுத்தால், சக உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உறுதுணையாக, ராணுவப் படையெடுப்பை மேற்கொள்ளும். இந்த பாதுகாப்பு அம்சத்தால், நேட்டோ உருவாக்கப்பட்டபோது 12 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தூதர்
நேட்டோவில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் தலைமையகமான ப்ரஸில்ஸில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தூதர் இருப்பார். அவர் தன்னுடைய நாடு சார்ந்த விவகாரங்களைக் கையாள்வார். நேட்டோ ராணுவக் குழுவில் நேட்டோ உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த முப்படைகளின் தலைவர்கள், சர்வதேச ராணுவத் தலைவர், ராணுவக் குழுவின் நிர்வாக அமைப்பினர் ஆகியோர் இருப்பர்.
நேட்டோவுக்கெனத் தனிப்பட்ட வகையில், குறைந்த அளவிலான படைகளே உள்ளன. எனினும் நேட்டோ அமைப்பு ஒரு போரில் ஈடுபடுவதாக முடிவெடுத்து அறிவித்தால், தன்னார்வ அடிப்படையில் உறுப்பினர் நாடுகள் படைகளை அனுப்பும். போர் முடிந்தபிறகு படைகள் மீண்டும் தங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பும்.
நேட்டோவின் ராணுவ நடவடிக்கைகள்
நேட்டோ தொடங்கப்பட்ட 1949-ல் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நேட்டோ எந்த ராணுவ நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. 1990-ல் இராக் குவைத் மீது போர் தொடுத்தபோது நேட்டோ தலையிட்டது. அடுத்ததாக 1992-ல் போஸ்னியா போரிலும் ஹெர்சேகோவினா போரிலும் நேட்டோ தலையிட்டது.
எனினும் தனிப்பட்ட வகையில் நேட்டோ எந்த நாட்டுடனும் போரிடாமல் இருந்தது. இந்த முடிவு செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின்போது வாபஸ் பெறப்பட்டது. 2003-ல் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவ பலம்
30 நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவின் ராணுவம் பலம் அதீதமானது. 2021 கணக்கீட்டின்படி, அமெரிக்கா தன்னுடைய ராணுவப் பாதுகாப்புக்காக ரூ.61.4 லட்சம் கோடியை (811 மில்லியன் டாலர்கள்) ஒதுக்கி உள்ளது. பிற நேட்டோ நாடுகள் தங்களின் ராணுவப் பாதுகாப்புக்காக 27.48 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளன. நேட்டோ அமைப்புக்கு அமெரிக்காவே அதிக நிதி ஒதுக்குகிறது. நேட்டோவின் ஆண்டு பட்ஜெட் ரூ.21.12 ஆயிரம் கோடியாக உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரில் நேட்டோவின் பங்கு
1990 வரை இருந்த சோவியத் ஒன்றியத்தின் பலம், ரஷ்யாவுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று அமெரிக்கா நினைத்தது. இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அதையே விரும்பின. இதனால் ரஷ்யாவின் ஆளுமையைக் குறைக்கத் திட்டமிட்டன.
அதற்காக சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகிய ரஷ்ய அண்டை நாடுகளை நேட்டோவில் இணைக்க ஆரம்பித்தன. நேட்டோ அமைப்பில், கடைசியாகத் தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வட மாசிடோனியா இணைந்தது. நேட்டோவில் ரஷ்ய எல்லை நாடுகளான போஸ்னியா, ஹெர்ஸ்கோவினா, ஜார்ஜியா மற்றும் உக்ரைன் ஆகியவையும் இணைய ஆர்வமாக இருந்தன. இதற்கு நேட்டோவும் இசைந்தது. எனினும் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
ரஷ்ய எல்லை நாடுகளுடன் நேட்டோ நெருக்கம் ஆவது ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. முன்னதாக, ’’ரஷ்ய எல்லைப் பகுதியான உக்ரைனில் அமெரிக்கா எதற்கு தங்களின் படைகளை நிலைநிறுத்துகிறது? என்று கேட்ட புடின், கனடா அல்லது மெக்சிகோ எல்லையில் ரஷ்ய ஏவுகணைகளை நிலைநிறுத்தினால், அமெரிக்கா வேடிக்கை பார்க்குமா?’’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
நேட்டோ தன்னுடைய படைகளை ரஷ்ய எல்லைகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும். நேட்டோ அமைப்பில் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் இணையக் கூடாது என்று போருக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்கு அமெரிக்கா செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.