Moscow Attack: உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்!
Moscow Attack: ரஷியா மாஸ்கோ தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.
Moscow Attack: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள இசைக்கச்சேரி அரங்கு ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 80 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த 145 பேருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இசைக்கச்சேரி அரங்கில் நுழைந்த மர்ம நபர்கள்:
மாஸ்கோ அருகே கிராஸ்னோகோர்ஸ்க் நகரில் பிரபல குரோகஸ் சிட்டி ஹால் கான்சர்ட் அமைந்துள்ளது. இசைக்கச்சேரி நடத்த பயன்படும் இந்த இடத்தில் வணிக வளாகமும் அமைந்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர், இங்கு ஆயுதங்களுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.
மக்களை நோக்கி அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். இதனால், அங்கு தீ பரவியது. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், பின்னர், வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. மர்ம நபர்களின் தாக்குதலால் ஹாலின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தாக்குதல் நடத்தப்பட்ட குரோகஸ் சிட்டி ஹாலில் பிக்னிக் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. ஆனால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இசைக்குழுவை சேர்ந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அதிர்ச்சி:
இந்த தகவலை உறுதி செய்த ரஷிய அரசுதரப்பு வழக்கறிஞர் அலுவலகம், "குரோகஸ் சிட்டி ஹாலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கச்சேரி தொடங்குவதற்கு முன்பே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்" என கூறியுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து கான்சர்ட் ஹாலில் இருந்து மக்கள் அலறியடித்து வெளியேறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாக்குதல் குறித்து மாகாண ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தகவல் கூறுகையில், "மாஸ்கோவில் பல ஆண்டுகளில் நடக்காத அளவுக்கு மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.
மக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு குழு அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 70 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த நூற்று நாற்பத்தைந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 60 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்" என்றார். இதுகுறித்து ரஷிய அரசு வெளியிட்ட தகவலில், "ரஷிய அதிபர் புதினுக்கு தாக்குதல் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளது.
மாஸ்கோ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "துக்ககரமான இந்த காலக்கட்டத்தில் ரஷிய அரசுடனும் அந்நாட்டு மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது. தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.