Lay-Off : இதுக்கு ஒரு முடிவே இல்லையா? 2-வது கட்ட பணிநீக்கம்.. இந்த நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..
பணி நீக்க நடவடிக்கைக்கு தயாராகும்படி மெட்டா நிறுவனத்தின் மேலாளர்களுக்கு அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கையை தொடங்க அதன் தாய் நிறுவனமான மெட்டா தயாராகி வருகிறது. அதிதிறன் வாய்ந்த நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பது மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க்கின் நோக்கமாக உள்ளது.
சக்கர்பெர்க் திட்டம்:
சக்கர்பெர்க் திட்டத்தின் தொடர்ச்சியாக மேல் குறிப்பிட்ட நிறுவனங்களை மறுகட்டமைத்து அதிக திறன் வாய்ந்த நிறுவனமாக மாற்ற பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்க நடவடிக்கைக்கு தயாராகும்படி மெட்டா நிறுவனத்தின் மேலாளர்களுக்கு அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட உள்ளது. செலவை குறைக்கும் விதமாக நிறுவனத்தில் உள்ள 10,000 பதவிகள் நீக்கப்படும் என சக்கர்பெர்க் மார்ச் மாதம் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மே மாதத்தில் அடுத்தக்கட்ட பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மெட்டா நிறுவனத்தில் மொத்த தொழிலாளர் பலத்தில் ஏற்கனவே 13 சதவிகித பணிகள், அதாவது 11,000 பணிகள், நவம்பர் மாதம் குறைக்கப்பட்டது. முதல் காலாண்டு முழுவதுமே பணி சேர்ப்பு நடவடிக்கையை மெட்டா தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் டன்சோ நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. பணியாளர்கள் எண்ணிக்கையில் 30 சதவிகித ஆட்களை குறைத்தது டன்சோ. அதாவது, கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் பணியில் இருந்து தூக்கப்பட்டனர். இதன்மூலம், டன்சோ நிறுவனத்திற்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்தது.
ஊழியர்களுக்கு அதிர்ச்சி:
வரும் 2025ஆம் ஆண்டு, டன்சோ நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தையில் விற்கப்பட உள்ள நிலையில், பணி நீக்க நடவடிக்கை டன்சோ நிறுவனத்திற்கு உதவும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, ஐடி நிறுவனமான அக்சன்சர் நிறுவனமும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள உள்ளதாக அறிவித்தது. கிட்டத்தட்ட 19,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளது அக்சன்சர் நிறுவனம். இதனால், ஆண்டு வருவாயும் லாபமும் குறையும் என அந்நிறுவனம் கணித்தது.
சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தது.