Masood Azhar: ஆபரேஷன் சிந்தூரின் போது தட்டித் தூக்கப்பட்ட மசூத் அசாரின் குடும்பம் - JeM பயங்கரவாதி ஒப்புதல்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் துண்டாடப்பட்டதாக, இத்தனை நாட்களுக்குப் பிறகு, அந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஜெய்ஷ இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் குடும்பம், இந்திய படைகளால் துண்டாடப்பட்டதாக, அதே அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசியது என்ன.?
தற்போது இணையத்தில் வைரலாகிவரும் வீடியோவில் பேசியுள்ள ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் கமாண்டராக செயல்படும் பயங்கரவாதி மசூத் இலியாஸ் காஷ்மீரி, பயங்கரவாதத்தை தழுவி, டெல்லி, காபூல் மற்றும் காந்தகரில், பாகிஸ்தானை பாதுகாக்க சண்டையிட்டுள்ளதாக கூறியுள்ளான்.
மேலும், அனைத்தையும் இழந்த பிறகு, மே 7-ம் தேதி, மவுலானா மசூத் அசாரின் குடும்பத்தை பஹவல்பூரில் வைத்து இந்திய படைகள் துண்டாடிவிட்டதாக கூறியுள்ளான்.
பயங்கரவாதி மசூத் அசார் யார்.?
ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் தான் மசூத் அசார். இவன், 2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளம் மீது நடந்த தாக்குதல், 2019-ல் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன்.
இந்த மசூத் அசார், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் சிந்தூரின்போது நடந்தது என்ன.?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தை கேட்டு கேட்டு 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை கொன்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலைகளை செய்தது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பு தான் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில், இந்தியா துல்லிய தாக்கதல்களை நடத்தி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகளை அழித்தது.
அதோடு, அந்நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய படைகள். இந்த தாக்குதலின்போது, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் குடும்பமும் கொல்லப்பட்டது.
ஆனால், இந்த தாக்குதலில் மசூத் அசார் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவன் நடமாடியதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சூழலில் தான், தற்போது மசூத் அசாரின் குடும்பம் இந்திய படைகளால் துண்டாடப்பட்ட தகவலை, ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தளபதியே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















