Japanese Princess Mako | காமன்மேனுடன் காதல்.. பட்டமும் வேண்டாம்.. கோடிக்கணக்கான பணமும் வேண்டாம். இது ஜப்பான் இளவரசியின் கதை!
வழக்கமான சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்துகொள்வதன் மூலமும் தங்களை சுற்றியுள்ள பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்தார் இளவரசி மகோ
ஒரு சாமானியரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதால் அரச குடும்ப பட்டம் இனி தனக்கு வேண்டாம் என சொல்லியதோடு அரசு குடும்ப மரபுப்படி தனக்கு அளிக்கவிருந்த பல கோடி ரூபாயையும் நிராகரித்துள்ளார் ஜப்பான் இளவரசி மகோ.
ஜப்பானின் பட்டத்து இளவரசரின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான மகோ அந்நாட்டை சேர்ந்த சாமானியரான கொமுரோவைப் பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ள எண்ணி அதற்கான ஏற்பாடுகளை செய்தபோது, கொமுரோவின் தாயார் தன்னிடம் 4 மில்லியன் யென் (ஜப்பானிய பணம்) கடன் வாங்கி திரும்ப செலுத்தவில்லை, அதில் கொமுரோவின் படிப்பு செலவுகளும் அடங்கும் என்று அவரது முன்னாள் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இளவரசியின் காதலர் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறப்பட்டதால் அது ஜப்பானில் மிகப்பெரிய பேசுபொருளானது. அந்த பரபரப்பான விவாதங்களுக்கு மத்தியில் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொமூரோ தனது சட்டப் படிப்பிற்காக அமெரிக்காவுக்குச் சென்றார். இது எதிர்மறை கவனத்தை (Negativity) குறைப்பதற்கான முயற்சியாகத்தான் பரவலாக பேசப்பட்டது.
இது குறித்து கடந்த ஆண்டு பேசிய மகோவின் தந்தையும், பட்டத்து இளவரசருமான அகிஷினோ தனது மகளின் திருமணத்தை ஆதரிப்பதாக கூறினார். ஆனால் அவர் பொதுமக்களின் "புரிதலை" வெல்ல வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து வழக்கமான சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதன் மூலமும் தங்களை சுற்றியுள்ள பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்தார் இளவரசி மகோ. பொதுவாக ஜப்பானில் பல்வேறு சடங்குகளுடன் அரசக் குடும்ப திருமண நிகழ்வுகள் நடைபெறும். இந்நிலையில் தற்போது இந்த ஜோடிபாரம்பரிய சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதுள்ளனர். அதேபோல அரச குடும்ப பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும்போது குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும் மிகப்பெரிய தொகையான 4 மில்லியன் யென் (12மில்லியன் அமெரிக்க டாலரையும்) வேண்டாம் என சொல்லியுள்ளார் இளவரசி. ஜப்பானின் சுதந்திரத்திற்கு பிறகு தற்போதுதான் அரசக்குடும்பத்தின் வழக்கங்கள் மாறியிருக்கிறது. அந்த பணத்தை வேண்டாம் என சொல்கிற முதல் இளவரசி மகோதான். இதற்குமுன் அந்த குடும்பத்தில் யாரும் அவ்வாறு சொல்லியதில்லை.
இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மகோ-கோமுரோ ஆகிய இருவரும் அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து மகோ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அரச குடும்ப அந்தஸ்துகள் வேண்டாம் என சொல்லிய பிரிட்டனின் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகிய மற்றொரு அரச குடும்ப தம்பதியுடன் ஒப்பிட்டு பலரும் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
மகோவுக்கு 14 வயதான ஹிசாஹிடோ எனும் தம்பி உள்ளார். அவர்தான் குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு. அடுத்த அரியணை பொறுப்புகள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களுக்கு மட்டுமே செல்லும். இந்நிலையில் மகோ ஒரு சாமானியரை திருமணம் செய்து கொள்ள உள்ளதால் அவருக்கு வாரிசுகள் பிறந்தால் அவர்களும் அரசக் குடும்பத்தின் வாரிசுகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.