Israel - Hamas War: ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த காஸாவிற்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு!
Israel - Hamas War: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காஸாவிற்கு வருகை தந்து, ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
Israel - Hamas War: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காஸாவிற்கு வருகை தந்து, போரின் மூன்று இலக்குகளை ராணுவ வீரர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
காஸாவில் போர் நிறுத்தம்:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பல நாடுகளின் முயற்சியால் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, காஸா பகுதிக்கு நேரில் சென்றிருந்தார். அப்போது, அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்பு குறித்து கேட்டறிந்ததோடு, வீரர்களுடன் உரையாடினார். கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கங்களில் ஒன்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து. ஹமாஸுக்கு எதிரான நாட்டின் நடவடிக்கைகள் வெற்றி பெறும் வரை தொடரும் என்று, நேதன்யாகு வலியுறுத்தியதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Prime Minister Benjamin Netanyahu visited in the Gaza Strip, where he received security briefings with commanders and soldiers and visited one of the tunnels that has been revealed.
— Prime Minister of Israel (@IsraeliPM) November 26, 2023
"We are continuing until the end – until victory. Nothing will stop us. Am Yisrael Chai." pic.twitter.com/5hA6DKFG2Y
நேதன்யாகுவின் 3 இலக்குகள்:
ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது நேதன்யாகு 3 இலக்குகளை வலியுறுத்தியுள்ளார். அதன்படி, ”ஹமாஸை ஒழிப்பது, பணயக்கைதிகள் அனைவரையும் திரும்பப் பெறுவது மற்றும் காஸா மீண்டும் இஸ்ரேல் அரசுக்கு அச்சுறுத்தலாக மாறாது என்பதை உறுதிப்படுத்துவது” போரின் முக்கிய இலக்குகள் என நேதன்யாகு வலியுறுத்தியுள்ளார். அதோடு, “பணயக்கைதிகளை மீட்பதற்கான இடைவிடாத முயற்சிகள் எடுக்கப்படும். நாங்கள் இறுதிவரை - வெற்றி வரை தொடருவோம். எதுவும் எங்களைத் தடுக்காது, போருக்கான எங்கள் இலக்குகள் அனைத்தையும் அடைவதற்கான வலிமை, சக்தி, விருப்பம் மற்றும் உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதைத்தான் நாங்கள் செய்வோம்” என்றும் நேதன்யாகு சூளுரைத்துள்ளார். காஸா நகரில் நேதன்யாகு, ஐடிஎஃப் துணைத் தலைவர் மற்றும் தளபதிகளுடனும் கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்படும் பணயக் கைதிகள்:
போர் நிறுத்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் தற்போது பல்வேறு கட்டங்களாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இஸ்ரேலியர்கள் மட்டுமின்றி தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நபர்களும் உள்ளனர். கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பெற்றோரை இழந்த, அமெரிக்காவைச் சேர்ந்த 4 வயது சிறுமியும் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்களில் விடுவிக்கப்பட்ட முதல் நபர் அந்த சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.