Israeli PM: "ஆமா, நாங்க தான் 40 பேர கொன்னோம்” - பேஜர் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் பிரதமர்
Israeli PM: ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான பேஜர் தாக்குதலுக்கு நானே அனுமதி அளித்தேன் என, இஸ்ரேல் பிரதமர் நேதய்ன்யாகு தெரிவித்துள்ளார்.
Israeli PM: ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான பேஜர் தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நடத்திய பேஜர் தாக்குதல்:
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேஜர் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டு 3,000 பேர் காயமடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, லெபனானில் நடந்த அந்த தாக்குதல்களுக்கு நானே ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனியாட் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “"லெபனானில் பேஜர் தாக்குதல் நடத்த கிரீன் சிக்னல் கொடுத்ததை நெதன்யாகு ஒப்புக்கொண்டார்," என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஓமர் டோஸ்ட்ரி தெரிவித்துள்ளார். மேலும், “பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய நபர்களின் எதிர்ப்பையும் மீறி பேஜர் நடவடிக்கை மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் கொலை மேற்கொள்ளப்பட்டது” என்று நெதன்யாகு கூறியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
பேஜர் வெடிப்பில் 40 பேர் உயிரிழப்பு
முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்த பேஜர் வெடிப்பு, கடந்த செப்டம்பரில் லெபனான் முழுவதும் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக அரங்கேறியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய அந்த கையடக்க சாதனங்கள் வெடித்ததில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் லெபனானில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என அப்போதே ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டி வந்த நிலையில், இஸ்ரேல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளது.
பேஜர்கள் வெடித்தது எப்படி?
பேஜர் தாக்குதல்கள் லெபனானை உலுக்கிய சில நாட்களுக்குப் பிறகு, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தி அறிக்கையில், ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டு, சில கிராம் வெடிமருந்துகளுடன் சாதனங்களை தயாரித்து ஹிஸ்புல்லாவுக்கு விநியோகித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முழு நடவடிக்கையும் இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பால் மிகவும் சிக்கலான முறையில் திட்டமிடப்பட்டதாகவும், அது நிறைவேற்றப்படுவதற்கு சில மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் தொழில்நுட்ப பயன்பாட்டை குறைக்க முடிவு செய்தபோது, அந்த தகவலை உணர்ந்த இஸ்ரேல் உடனடியாக பேஜர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
பேஜர் பயன்பாட்டை விரிவாக்க நஸ்ரல்லா முடிவு செய்வதற்கு முன்பே இஸ்ரேல் ஷெல் நிறுவனத்தை நிறுவுவதற்கான திட்டத்தைத் தொடங்கியது. ஹிஸ்புல்லா தலைவர் மிக நீண்ட காலமாக பேஜர்களில் முதலீடுகளை அதிகரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது ஏற்கனவே பரவலானதால் இஸ்ரேல் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது..
லெபனானில் வெடித்த பேஜர்களை ஹிஷ்புல்லா வாங்கிய தைவானிய நிறுவனமான கோல்ட் அப்பல்லோவின் சார்பாக ஹங்கேரியை தளமாகக் கொண்ட BAC கன்சல்டிங் நிறுவனம் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக தன்னை சித்தரித்துக்கொண்டது. இருப்பினும், உண்மையில், அந்த நிறுவனம் இஸ்ரேலால் நடத்தப்பட்டது மற்றும் பேஜர்களை உருவாக்கியவர்கள் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகள் என்று அந்த செய்தி அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.