போருக்கு பிறகு ஹமாஸ் தலைவர்களை தேடி, தேடி கொல்ல சதி திட்டம்! மொசாட்டை களமிறக்க இஸ்ரேல் ஸ்கெட்ச்!
போரை தொடர்ந்து ஹமாஸ் தலைவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறிய இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர்.
பெரும் சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, ஏழு நாள்கள் தொடர்ந்தது. தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலும் பிடிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
முடிவுக்கு வந்த தற்காலிக போர் நிறுத்தம்:
ஹமாஸ் பிடித்த வைத்த பணயக்கைதிகளும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதலை தொடங்கியது. அதில், 178 பேர் மரணம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், போரைத்தொடர்ந்து ஹமாஸ் தலைவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. காசாவில் போர் முடிவடைந்தவுடன், கண்டம் கடந்து பல்வேறு நாடுகளில் வசித்து வரும் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1972ஆம் ஆண்டு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மேயர் எடுத்த அதிரடியான நடவடிக்கையின் காரணமாக பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் பலர் கொல்லப்பட்டனர். கோல்டா மேயரை போன்று ஹமாஸ் தலைவர்களை கொல்ல பெஞ்சமின் நெதன்யாகு முனைப்பு காட்டி வருகிறார். இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியாகியுள்ளது.
மொசாட்டை களமிறக்க ஸ்கெட்ச்:
இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் அமைப்புக்கு நெதன்யாகு உத்தரவிட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. துருக்கி, லெபனான், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை கொல்ல மொசாட் அமைப்பு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ள மொசாட் அமைப்பின் முன்னாள் இயக்குநர் எப்ரைம் ஹலேவி, "இத்தகைய நடவடிக்கைகள் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும். உலகெங்கிலும் உள்ள ஹமாஸ் தலைவர்களை கொல்லுவது இஸ்ரேலுக்கான அச்சுறுத்தல்களை அகற்றாது" என்றார்.
அமெரிக்க அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன், ஹமாஸின் அரசியல் அலுவலகம் கத்தாரில் 2012இல் திறக்கப்பட்டது. தகவல் தொடர்புக்காக அலுவலகத்தை திறக்க அமெரிக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. இஸ்மாயில் ஹனியே, முகமது டெய்ஃப், யாஹ்யா சின்வார் மற்றும் கலீத் மஷால் ஆகிய ஹமாஸ் தலைவர்களை கொல்ல மொசாட் திட்டமிட்டு வருகிறது.
இஸ்மாயில் ஹனியே:
60 வயதான இஸ்மாயில் ஹனியே, முன்னாள் பாலஸ்தீன பிரதமர். கடந்த 2017ஆம் ஆண்டு, ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006இல், பாலஸ்தீனப் பிரதமராகப் பதவிவகித்தபோது, விஷம் தடவிய கடிதத்தை அவருக்கு அனுப்பி கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டது. ஆனாவ், அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். தற்போது, கத்தாரிலும் துருக்கியிலும் வாழ்ந்து வருகிறார்.
முகமது டெய்ஃப்:
ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவுக்கு தலைவராக உள்ளார். இஸ்ரேல் அரசாங்கத்தின் முதன்மை எதிரியாக கருதப்படுபவர். இஸ்ரேலிய அதிகாரிகள் அவரை குறைந்தது ஆறு முறை படுகொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அவர் அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து வருகிறார். தற்போது, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், காசாவில் ஹமாஸ் போராளிகளுடன் இணைந்து போரிட்டு வருவதாக கூறப்படுகிறது.
யாஹ்யா சின்வார்:
ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு முன்னாள் தளபதி யாஹ்யா சின்வார். இவருக்கு வயது 61. காசாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 23 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறைகளில் தனது வாழ்க்கையை கழித்தவர். கடந்த 2011ஆம் ஆண்டு, விடுவிக்கப்பட்டார்.
கலீத் மஷால்:
ஹமாஸ் பொலிட்பீரோ தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு வரை, அதன் தலைவராக பதவி வகித்தார். தற்போது, அவர் கத்தாரில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1997ஆம் ஆண்டு, ஜோர்டானில் அவரை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மொசாட் அமைப்பின் உளவாளிகள், கனட நாட்டின் சுற்றுலாப் பயணிகளாக நடித்து, அவரின் காதுகளில் விஷத்தை தெளித்தனர். பின்னர், கொலை செய்ய முயற்சித்த மொசாட் உளவாளிகள் பிடிப்பட்டனர். மஷால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது, அமெரிக்க அதிபராக பதவி வகித்த பில் கிளிண்டனின் தலையீட்டில் விஷத்துக்கான மாற்ற மருந்தை மஷாலுக்கு மொசாட் அமைப்பினர் அளித்தனர்.