Israel to Capture Gaza: இனி என்ன நடக்கப் போகுதோ.!? காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்...
காசா பகுதியில் இஸ்ரேல் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, அமெரிக்க மத்தியஸ்தத்துடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் பயங்கர தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா பகுதியை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்க, இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இனி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் தீவிரமான இஸ்ரேல் - ஹமாஸ் போர்
கடந்த வருடம் அக்டோபர் மாதம், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில், வடக்கு காசாவை குறிவைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல், பின்னர் தெற்கு காசாவிலும் தாக்குதல்களை விரிவுபடுத்தியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரை மற்றும் வான்வழியாக தீவிர தாக்குதல்களை நடத்தியதால், உயிரிழப்புகள் அதிகரித்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் தலையீட்டால், ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வந்தது. முதல் கட்டமாக போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், ஹமாஸ் பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிக்க மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இரு தரப்பிலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 3-வது வாரத்தில், இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்களை தொடங்கியது. இதனால், 2 மாதங்களாக இருந்துவந்த முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் ஏற்க மறுத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
மறுபுறம், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட உண்மையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக, ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. எனினும், தற்போது காசா பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
காசாகை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
இப்படிப்பட்ட சூழலில், காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காசாவை முழுமையாக கைப்பற்றி குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கு தங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்து, போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை தெற்கு காசாவிற்கு இடம் பெயர வைக்கும் சாதியக்கூறுகளும் திட்டத்தின் ஒரு பகுதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















