Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்
கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேனவும் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிக்கும் கெய்ர் ஸ்டார்மருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்த தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். போட்டியாளரான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையை பிடித்து உள்ளதால் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்:
இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுதேர்தலில், கெய்ர் ஸ்டோர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேனவும் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிக்கும் கெய்ர் ஸ்டார்மருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் எனவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
#UPDATE British leader Rishi Sunak conceded defeat Friday to Keir Starmer's main opposition Labour party in the UK general election, saying, "I take responsibility for the loss".
— AFP News Agency (@AFP) July 5, 2024
"Today, power will change hands in a peaceful and orderly manner with goodwill on all sides," said… pic.twitter.com/RqxOyFjH7F
கெய்ர் ஸ்டார்மர் கட்சி 370க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 90க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அமைதியான முறையில் ஆட்சி மாற்றம்:
ரிச்மண்ட் மற்றும் வடக்கு அலர்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ரிஷி சுனக், ”இந்தப் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது, அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க சர் கெய்ர் ஸ்டார்மரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். இன்று அதிகாரம் அமைதியாகவும், சரியான முறையிலும் அனைத்து வகையிலும் நல்லெண்ணத்துடன் கைமாறும். நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் பதிவியேற்பது எப்போது?
தேர்தல் தோல்வியை தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்லஸை நேரில் சந்தித்து, ரிஷி சுனக் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக, வெற்றி பெற்ற கெய்ர் ஸ்டார்மரை ஆட்சி அமைக்க வரும்படி மன்னர் முறைப்படி அழைப்பு விடுப்பார். அதனடிப்படையில் விரைந்து அவர் அடுத்த பிரதமராக, அடுத்த சில நாட்களில் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. மொத்த வாக்குகளும் எண்ணி முடிக்கப்படும்போது, தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி வாகை சூடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்டார்மர் முன்புள்ள சவால்கள்:
பழமைவாத கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களின் பேராதரவுடன் ஸ்டார்மர் ஆட்சிக்கு வந்தாலும் அவர் பல கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனின் வரிச்சுமை மிக அதிகமாக உள்ளது. நிகரக் கடன் கிட்டத்தட்ட வருடாந்திர பொருளாதார உற்பத்திக்கு சமமாக உள்ளது. வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுகாதார சேவை போன்ற பொது சேவைகள், வேலைநிறுத்தங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய பிரதமர் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் தான் ஆட்சிக்கு வரவுள்ளார்.