Hurricane Ida New York: அமெரிக்காவில் ஐடா ஏற்படுத்திய வரலாறு காணாத வெள்ளம்: 44 பேர் பலி!
Hurricane Ida New York: அமெரிக்காவில் ஐடா புயலால் ஏற்பட்டுள்ள கனமழையால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மழை வெள்ளத்துக்கு 44 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் ஐடா புயலால் ஏற்பட்டுள்ள கனமழையால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மழை வெள்ளத்துக்கு 44 பேர் பலியாகினர்.
ஐடா என்று பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த 4 ஆம் எண் புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது. இந்த சூறாவளி கரையைக் கடந்தபோது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் லூசியானா மாகாணமே புரட்டிபோடப்பட்டது. குறிப்பாக நியூ ஆர்லியன்ஸ் நகரம் சின்னாபின்னமானது. இன்னமும் வடகிழக்கு மாகாணங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
நியூயார்க், நியூஜெர்சு, பென்சில்வேனியா, கனெக்டிகட் போன்ற பகுதிகளில் மக்கள் மழை வெள்ளத்திலும், இருளிலும் தத்தளிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் சுதந்திர தேவி சிலையே மூழ்கடிக்கும் அளவில் மழை பதிவானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. நியூயார்க் நகரில் மட்டுமே 13 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் ஏற்பட்டுள்ள அசாதரண சூழலால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரின் ப்ரூக்லின் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளில் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
ஐடா புயல் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அகலாத நிலையில் மேரிலேண்ட் எனும் பகுதியில் சிறிய அளவிலான இரண்டு சூறாவளி தாக்கியுள்ளன. அனபோலிஸ் பகுதியில் இன்றும் பால்டிமோர் பகுதியில் இன்னொன்றும் நிலை கொண்டிருந்தன.
இதேபோல் ஃபிலடெல்ஃபியா பகுதியும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஐடாவால் 15 முதல் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஐடாவால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்த நிலையில் 4 வடகிழக்கு மாகாணங்களில் மட்டுமே 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருளில் தவிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐடா புயலின் தீவிரத்துக்கு பருவநிலை மாறுதலே காரணம் எனக் கூறப்படுகிறது. அண்மையில், ஜெர்மனி, நெதர்லாண்ட், பெலாரஸ் போன்ற நாடுகளிலும் கடும் மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போதும் பருவநிலை மாற்றமே காரணமாகக் கூறப்பட்டது. பருவநிலை மாறுதல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவை எட்ட வேண்டும் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான, சர்வதேச வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஐம்பதாண்டு காலத்தில் வெள்ளம், அனல் காற்று போன்ற பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் இயற்கை சீற்றத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.