Afghanistan: இசை ஒழுக்கக்கேடானது.. இசைக்கருவிகளை தீயிட்டு கொளுத்திய தலிபான்கள்..!
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகள் என மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தலிபான் அரசு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திவருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகள் என மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தலிபான் அரசு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திவருகிறது. ஏற்கனவே பெண்களுக்கு எதிராக குறிப்பாக அழகு நிலையங்கள் எதுவும் செயல்படக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிராக விதித்த கடுமான சட்டங்களுக்கு இஸ்லாத்தை கை காட்டிய தலிபான் அரசு தற்போது அதே காரணத்தை காட்டி, இசைக் கருவிகளை பொது வெளியில் இசைக்க தடைவித்துள்ளது. இத்தடை விதிக்கப்பட்ட பின்னர், ஹெராத் மாகாணத்தில் இசைக் கருவிகளை பறிமுதல் செய்து இசை ஒழுக்கக் கேடானது எனக் கூறிய தலிபான் அரசு அவற்றை தீயிட்டு எரித்துள்ளது. இப்படியான தடையை விதித்த, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சர் தெரிவித்தது என்னவென்றால், "இசையை ஊக்குவிப்பது தவறை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்" எனக் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் மட்டும் நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர் மதிப்புள்ள இசைக்கருவிகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, தலிபான் அதிகாரிகள் இஸ்லாம் குறித்த அவர்களின் பார்வையை பிரதிபலிக்கும் சட்டங்களையும் விதிமுறைகளையும் தொடர்ந்து விதித்து வருகின்றனர். அவற்றின் ஒருபகுதிதான் இசைக்கருவிகளுக்கு தடை என்பது.
தலிபான்கள் ஆட்சியில் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்றால் அது பெண்கள் தான். பெண்கள் ஹிஜாப் அணியாமல் பொது இடங்களில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து கல்வி பெற தடை செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்குள் நுழைவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், சில அலங்காரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை அல்லது இஸ்லாத்திற்கு விரோதமானவை என்று தலிபான்கள் கருதியதால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அழகு நிலையங்கள் மூடப்பட்டன. இதனை எதிர்த்து பெண்கள் பெரும் போராட்டம் நடத்தினாலும், தலிபான் தனது உத்தரவை திரும்பப் பெறவில்லை. இதனால் சுமார் 60 ஆயிரம் பெண்கள் வேலையை இழந்துள்ளனர். அதேபோல் பெண்கள் கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.