Global warming | வெப்பமயமாகும் பூமியால் ஏற்படப்போகும் சிக்கல்.. பகீர் கிளப்பிய ஆய்வறிக்கை!
கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14% பவளப்பாறைகள் அழிந்துவிட்டன. இதற்குக் காரணம் மனிதர்களாகிய நம்மால் ஏற்பட்டுள்ள புவி வெப்பமயமாதலும் அதன் தாக்கமான காலநிலை மாற்றமுமே
கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14% பவளப்பாறைகள் அழிந்துவிட்டன. இதற்குக் காரணம் மனிதர்களாகிய நம்மால் ஏற்பட்டுள்ள புவி வெப்பமயமாதலும் அதன் தாக்கமான காலநிலை மாற்றமுமே காரணம் என்றும் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் குறிப்பிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பவளப்பாறைகள் என்ன மாதிரியான பாதிப்பை அடைந்தன என்பது குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தான் இது தெரியவந்துள்ளது.
குளோபல் கோரல் ரீஃப் மானிடரிங் நெட்வொர்க் என்ற சர்வதேச கூட்டமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 300 விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வறிக்கை 73 நாடுகள், 12,000 இடங்களில் 40 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் இணை எழுத்தரான ஆஸ்திரேலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெரைன் சயின்ஸின் தலைமைச் செயலர் பால் ஹார்டிஸ்டி, காலநிலை மாற்றம் தான் உலகின் பவளப்பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோரல் ப்ளீச்சிங்க் என்றால் என்ன?
புவி வெப்பமயமாதல் காரணமாக 1995 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் தனது தன்மையையே இழந்துவிட்டன. பவளப்பாறைகளின் முதுகெலும்பாக இருக்கின்றன பவள தண்டுகள் (Polyps). இவை கடல் வெப்பநிலை உயர்ந்தால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை.
காலநிலை மாற்றத்தில் கடல் நீர் மிகவும் சூடாக இருந்தால் பாலிப்ஸ் இறக்கக்கூடும். வெப்ப உயர்வு காரணமாக பவளப்பாறைகள் தனக்கு நிறத்தையும் வாழ்வையும் தரும், தன்னுள் வாழும் பாசிகளை இழந்துவிடும்.
இதனால், பவளப்பாறைகள் வெண்மையாக மாறும். இதை ஆங்கிலத்தில் 'கோரல் ப்ளீச்சிங்' என்று அழைக்கிறார்கள். இதனால், 1998ல் இருந்து பாதிக்கப்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் பவளப்பாறை அச்சுறுத்தலில் இருக்கிறது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட 'வெளுத்துப்போகும்' நிகழ்வுகளைத் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவளப்பாறைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
பவளப்பாறைகள் உலக சமுத்திர பரப்பில் 0.2% மட்டுமே உள்ளது. ஆனால், இவை கால்வாசி கடல்வாழ் உயிரினங்களின் உயிர்வாழிடமாக உள்ளன.
கடல் சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதோடு இவை கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு அளிப்பதுடன். கடல் சீற்றம், புயல், கடல் அரிப்பால் கடல்வாழ் உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கின்றன. பவளப்பாறைகள் குறித்து இன்னும் போதிய அக்கறை காட்டப்படாத பட்சத்தில், பவளப்பாறைகளுக்கு தொடர்ந்து குளோபல் வார்மிங்கால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.
க்ரீன்ஹவுஸ் வாயுக்களால் கடல் 90% அதீத வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறது. இதனால் கோரல் ப்ளீச்சிங் எனப்படும் பவளப்பாறை அழிவு ஏற்படுகிறது. ஐ.நா.வின் காலநிலை அறிவியல் ஆலோசனைக் குழுவானது, 1.5C குளோபல் வார்மிங்கால் உலகில் உள்ள 70 முதல் 90 சதவீத பவளப்பாறைகள் அழியக் காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறது.
பவளப்பாறைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்த கடல் சூழலியலை அழிவிலிருந்து மீட்பதற்கான வழிவகை என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.