Germany Strike : நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து...ஜெர்மனியை அலறவிடும் ஸ்டிரைக்...நடந்தது என்ன?
கடந்த சில மாதங்களாக, ஜெர்மனி பணவீக்கத்தால் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக, வாழ்க்கை செலவை சமாளிப்பதற்காக அதிக சம்பளம் வழங்கக் கோரி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தின் மிக பெரிய பொருளாதார நாடாக ஜெர்மனி உள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய கண்டத்தில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு மிக்க நாடாக ஜெர்மனி விளங்கி வருகிறது. மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என இரண்டாக உடைவதற்கு முன்பிலிருந்தே, இந்த நிலை தொடர்கிறது.
ஜெர்மனியின் செல்வாக்கிற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல். கிட்டத்தட்ட 16 ஆண்டுகதள், அதன் பிரதமராக பதவி வகித்த மெர்க்கல் அந்நாட்டை திறம்பட கையாண்டார். மெர்க்கலை தொடர்ந்து, ஓலாஃப் ஸ்கோல்ஸ், அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
பணவீக்கத்தால் பாதிப்பு:
இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக, ஜெர்மனி பணவீக்கத்தால் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக, வாழ்க்கை செலவை சமாளிப்பதற்காக அதிக சம்பளம் வழங்கக் கோரி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்த வாரம், விமான நிலையங்களில் பாதுகாப்பு ஊழியர்கள், ரயில் ஊழியர்கள் ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, விமான நிலையத்தின் பாதுகாப்பு ஊழியர்கள், இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கிட்டத்தட்ட 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு வெர்டி தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனால், டுசெல்டார்ஃப், ஹாம்பர்க் மற்றும் கொலோன்/பான் விமான நிலையங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் விமான நிலைய சங்கம் ADV தெரிவித்துள்ளது. இந்த மூன்று விமான நிலையங்களும் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டதாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியை அலறவிடும் வேலை நிறுத்த போராட்டங்கள்:
இதுகுறித்து ஹாம்பர்க் விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெர்டி தொழிற்சங்கம் அழைப்பு விடுத்தபோது, வேலைநிறுத்தம் எப்படி இருந்ததோ, அதேபோல இன்று நிலைமை இருந்தது. புறப்படும் முனையங்கள் காலியாக இருந்தன" என்றார்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்சங்கத்திற்கும் BDLS விமான பாதுகாப்பு சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார விடுமறையின் போதும், பொது விடுமுறையின் போதும் இரவு நேர பணிக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
2023இன் முதல் மூன்றரை மாதங்களில், வெர்டி வேலைநிறுத்தங்கள் காரணமாக 900,000 க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் விமானங்களை மாற்றியமைக்க அல்லது ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
விமான நிலைய வேலைநிறுத்தங்கள் மட்டும் இன்றி, ஜெர்மனி ரயில்வே மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் EVG நாளை நாடு தழுவிய போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.