இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு தமிழில் வாழ்த்து கூறிய பிரான்ஸ் அதிபரின் பதிவு குறித்து இங்கே காணலாம்.
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுரா குமார திசாநாயக்கவுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இலங்கையின் 9ஆவது அதிபராக அனுரா குமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்றை போன்று இரண்டாவது சுற்றிலும் அனுரா குமார திசநாயக்காவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அனுரா குமார திசநாயக்க வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அனுரா குமார திசாநாயக்க, இலங்கையின் முதல் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுபவர் இவர். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள சூழலில் அவரின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தமிழில் தனது வாழ்த்தை ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,” அன்புள்ள இலங்கை நண்பர்களே, உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது. அனுரா திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது. நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும்.” என்று அவரது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தமிழில் வாழ்த்து தெரிவித்து பலரையும் ஈர்த்து வருகிறது.