வங்கதேசம்: டாக்கா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலி - நடந்தது என்ன?
வங்கதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில சிக்கி, காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
44 பேர் பலி:
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நேற்று உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணியளவில் உணவகம் ஒன்றில் தீப்பிடித்தது. 7 மாடிகளை கொண்ட அந்த கட்டடத்தில் பல உணவகங்கள், துணி மற்றும் செல்போன் விற்பனை தொடர்பான பல கடைகள் உள்ளன. இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, அடுத்தடுத்த தளங்களும் முழுவதும் பற்றி எரிந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், 75 பேர் மீட்கப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 33 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 11 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பலியானவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர். உள்ளூர் நேரப்படி, நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
At least 44 people were killed in a massive fire that engulfed a building in #Bangladesh's capital #Dhaka. pic.twitter.com/PDTgeiI0Gf
— Pooja Mehta (@pooja_news) March 1, 2024
விபத்து நேர்ந்தது எப்படி?
பெய்லே சாலையில் உள்ள கிரீன் கோசி காட்டேஜ் எனப்படும் கட்டிடத்தில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் உள்ள கச்சி பாய்" உணவகத்தில் ஏற்பட்ட தீ மேலே இருந்த மற்ற தளங்களுக்கும் அதிவேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் அச்சமடைந்த உள்ளே இருந்த நபர்கள், உடனடியாக வெளியேறுவதற்காக ஜன்னல்கள் வழியாக மல்வேறு தளங்களில் இருந்து கீழே குதித்துள்ளனர். பலர் புகைமூட்டத்தால் மயங்கி கட்டிடத்திற்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அப்படி கட்டிடத்தில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தீக்காயங்கள் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தான் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவ காரணம் என்ன?
விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் வங்கதேச எல்லைக் காவலர் படை, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (ஆர்ஏபி), ஜெனரல் அன்சார் மற்றும் அன்சார் காவலர் பட்டாலியன் (ஏஜிபி) ஆகியவற்றின் ஆதரவுடன் பதிமூன்று தீயணைப்பு சேவை பிரிவுகள் கடுமையாக போராடி தீயை அணைத்தன. எரிவாயு கசிவு அல்லது அடுப்பில் இருந்து பற்றிய தீ காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். பல தளங்களில் உள்ள உணவக சமையலறைகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தீ வேகமாக பரவுவதற்கு காரணம் என்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர் . அதேநேரம், உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.