Quetta Bomb Blast: பாகிஸ்தானில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்... உடனடியாக அழைத்து செல்லப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்
பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது
பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள குவெட்டாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தால் பலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.டி.பி தீவிரவாத அமைப்பு
இத்தாக்குதலுக்கு, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Reports of multiple injuries in a bomb blast in highly secure area of Quetta near the Police headquarters and entrance of Quetta Cantonment. The city is under strict security due to a PSL cricket match. pic.twitter.com/lZcfn1VQRU
— The Balochistan Post - English (@TBPEnglish) February 5, 2023
இந்நிலையில் குவெட்டாவில் உள்ள நவாப் அக்பர் புக்தி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கண்காட்சி ஆட்டம் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற இருந்தது. ஆனால், இப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதலால் உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பாபர் அசாம், ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு டிரெஸ்ஸிங் ரூமுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடங்கிய ஆட்டம்:
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததை அடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
இதனிடையே, குண்டுவெடிப்பு காரணமாக போட்டி நிறுத்தப்படவில்லை என்றும், ரசிகர்களின் தொந்தரவு காரணமாகவே போட்டி நிறுத்தப்பட்டதாகவும் பாகிஸ்தானில் வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து இதுவரை எதுவும் வரவில்லை. குவெட்டாவில் கூட்டம் நிரம்பி வழிந்த மைதானம் என்பதால், சில விஷமிகள் மைதானத்தின் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன்ஸ் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு மசூதியில் ஜனவரி 30ஆம் தேதி மதியம் தொழுகை நடைபெற்றது.
தொழுகையை இமாம் தொடங்கிய அடுத்த சில வினாடிகளில் முதல் வரிசையில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.
மதியம் 1.40 மணிக்கு நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் கூரை இடிந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 221 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து , தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.