Sun Hurricane | `சூரிய சூறாவளி’ என்றால் என்ன? எப்போது ஏற்படும்? பூமிக்கு என்ன பாதிப்பு? - விவரங்கள் இதோ...
சூரியனில் சூறாவளி பருவம் தொடங்கவுள்ளது. பூமியில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள சூரியனில் இருந்து வெடிக்கும் தீக்குழம்புகளால் பூமியில் பல்வேறு காலநிலை மாற்றங்கள் ஏற்படும்.
பூமியில் பருவமழை, சூறாவளி, புயல் முதலானவை போல, சூரியனிலும் சூறாவளி பருவம் தொடங்கவுள்ளது. பூமியில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள சூரியனில் இருந்து வெடிக்கும் தீக்குழம்புகளால் பூமியில் பல்வேறு காலநிலை மாற்றங்கள் ஏற்படும்.
சூரியனின் மேற்பரப்பில் இந்த சூரிய சூறாவளிகள் உற்பத்தி ஆகின்றன. சூரியனின் மேற்பரப்பில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுவதற்கு சூரிய சூறாவளிகள் காரணமாக இருக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளை விட, சூரியனில் ஏற்படும் புள்ளிகள் சற்றே வெப்பம் குறைந்ததாக இருக்கும்; எனினும் அவற்றின் காந்தப் புலங்கள் வலிமையாக இருப்பதால் அவை ஒன்றிணைந்து வெடிப்பது நிகழ்கிறது. மிகப்பெரிய அளவுகளில் வெடிக்கும் இந்தப் புள்ளிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் சில சமயங்களில் பூமியை நோக்கி வரலாம். சூரியனின் மிகப் பெரிய அளவு காரணமாக, சிறியதாகத் தெரியும் இந்தப் புள்ளிகள், சில சமயம் பூமியை விட சுமார் 10 மடங்கு பெரியதாகவும் இருக்கலாம்.
சூரிய சூறாவளிகளின் போது, சூரியனில் தோன்றும் புள்ளிகளாலோ, இந்தப் புள்ளிகளின் கூட்டங்களாலோ சூரியனில் இருந்து தீக்குழம்புகள் வெடிக்கின்றன. இவை உருவாக்கும் ஆற்றல் பூமியை நோக்கி வரும் போது அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகளை வழக்கம் போல பயன்படுத்துவதை இந்த சூரிய சூறாவளிகள் பாதிப்படையச் செய்யும்.
இதுகுறித்து பேசியுள்ள நிபுணர்கள், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக, சூரிய சூறாவளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் அவை அதிகரிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூரியனின் சூறாவளிக் காலம் எப்போது?
சூரியனின் மேற்பரப்பில் மாற்றங்கள் ஏற்படுவது சூரியனில் ஏற்படும் பருவ மாற்றங்கள் தெரிய வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் சூரியனில் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, சூரியனின் மேற்பரப்பில் இருந்து தீக்குழம்புகள் அதிகம் வெடிக்கின்றன.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் விண்வெளி காலநிலைக் கணிப்பு மையத்தின் விஞ்ஞானிகள் இதுபோன்ற புள்ளிகளைக் கண்காணிப்பதோடு, சூரியனில் உள்ள கால நிலை மாற்றங்களை செயற்கைக் கோள்களின் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழல் குறித்து பேசியுள்ள பில் முர்டாக் என்ற விஞ்ஞானி, `பூமியைப் போல, சூரியனிலும் நேர்மறை, எதிர்மறை துருவங்கள் இருக்கின்றன. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த துருவங்கள் மாற்றிக் கொள்வது நிகழ்கிறது. நேர்மறையான துருவம் எதிர்மறைத் துருவமாகவும், எதிர்மறைத் துருவம் நேர்மறைத் துருவமாகவும் மாறுகிறது. இது நிகழும் போது, சூரியனில் புள்ளிகள் தோன்றுகின்றன. இவை விண்வெளியின் கால நிலையில் மாற்றங்கள் உருவாக்குகிறது’ எனக் கூறியுள்ளார்.
சூரியனில் தற்போது நிகழும் இந்தக் காலநிலை மாற்றங்கள் வரும் 2023ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை அதன் உச்சபட்சத்தைத் தொடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இவ்வாறு சூரியனில் சூறாவளிகள் தோன்றும் போது பூமியில் சூரிய ஆற்றல் மூலமாக இயங்கும் பொருள்களில் பாதிப்பு ஏற்படலாம்; இது செயற்கைக் கோள்களுக்கும், விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்தாக அமையும். மேலும் இவை பூமியின் துருவங்களில் விமானப் பயணம் மேற்கொள்வோரின் பாதைகளை மாற்றும் அபாயத்தையும் உருவாக்கும். மேலும், சில இடங்களில் இவை மின்சார இணைப்புகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.