Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
உலகமே எதிர்பார்த்திருக்கும் ஒரு விஷயம், ட்ரம்ப்-மஸ்க் இடையேயான மோதல் முடிவுக்கு வருமா என்பது தான். இந்நிலையில், மஸ்க்குடன் பேசுவது குறித்த கேள்விக்கு ட்ரம்ப் என்ன பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலக பணக்காரர் மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டது, உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மஸ்க்குடனான சமாதானத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறிய ட்ரம்ப், தற்போது தன் நிலையை மாற்றியுள்ளதுபோல் தெரிகிறது. இன்று, மஸ்க்குடன் பேசுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர் என்ன பதில் கூறியிருக்கிறார் தெரியுமா.?
மஸ்க்குடன் பேசுவது குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிபர் ட்ரம்ப். அப்போது, எலான் மஸ்க்குடன் தொலைபேசி வாயிலாக பேசும் திட்டம் எதுவும் உள்ளதாக என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அது குறித்து நான் எதுவும் யோசிக்கவே இல்லை என்று பதிலளித்தார்.
மேலும், அவர் என்னிடம் பேச வேண்டும் என்று நான் நினைப்பேன் என கூறினார். நான் அவராக இருந்தால், என்னிடம் பேச வேண்டும் என்று நான் நினைப்பேன் எனவும், ஒரு வேளை அவர் ஏற்கனவே அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறிய ட்ரம்ப், அவர் ஏற்கனவே அழைக்கப்பட்டிருக்கிறாரா என அவரிடம் கேளுங்கள் எனவும், ஆனால், எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் பதிலளித்தார் ட்ரம்ப்.
ட்ரம்ப் மஸ்க் மோதல் பின்னணி என்ன.?
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு பெரிய அளவில் உதவிகளை செய்து, அவர் அதிபராவதில் முக்கிய பங்காற்றினார் மஸ்க். பின்னர் தேர்தலில் வென்று அதிபராக பொறுபேற்ற ட்ரம்ப், அரசு செயல்திறன் துறை(DOGE) என்ற ஒன்றை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
அதன் பின் அதிரடியாக செயல்பட்ட மஸ்க், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதற்கு ஒருபுறம் பலத்த எதிர்ப்புகள் எழுந்தது ஒருபுறமிருக்க, அரசின் மீதே அதிக கவனம் செலுத்தியதால், மஸ்க்கின் நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. அவரது டெஸ்லா நிறுவனம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மஸ்க், தனது கவனத்தை தனது நிறுவனங்கள் மீது திருப்பப் போவதாக அறிவித்தார். இதையடுத்து, ட்ரம்ப்பிற்கும் அவருக்கும் இடையே சிறிய மனவருத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் அரசு செயல்திறன் துறையிலிருந்து விலகினார் எலான் மஸ்க்.
அதைத் தொடர்ந்து, மஸ்க் - ட்ரம்ப் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து, சமூக வலைதளத்தில் மாறி மாறி பதிவுகளை போட்டு வந்தனர். இந்த சூழலில், ட்ரம்ப்பிற்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு ஒரு பதிவை போட்டார் மஸ்க். அதில், உண்மையிலேயே பெரிய குண்டு ஒன்றை போட வேண்டிய நேரமிது என்று குறிப்பிட்டு, எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்ப்பின் பெயர் உள்ளது என மஸ்க் குறிப்பிட்டிருந்தார். அந்த கோப்புகள் பொதுவெளியில் வராததற்கு அது தான் உண்மையான காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவின் கமெண்ட்டில், இந்த பதிவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், உண்மை வெளியே வரும் என்றும் மஸ்க்கே பதிவிட்டிருந்தார். மேலும், ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஜே.டி. வான்ஸ் பதவியேற்க வேண்டும் என்று வந்த ஒரு கமெண்ட்டை மேற்கோள் காட்டி, ஆமாம் என கூறியிருந்தார் மஸ்க். அதைத் தொடர்ந்து, மஸ்க்கின் பதிவு உலக அளவில் பேசுபொருளானது.
எப்ஸ்டீன் யார் என்று மக்கள் தேட ஆரம்பித்தனர். இதனால் கோபமடைந்த ட்ரம்ப், மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கான அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டினார். இப்படிப்பட்ட சூழலில், திடீரென ட்ரம்ப் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதாக தான் போட்ட பதிவை சமீபத்தில் நீக்கினார் எலான் மஸ்க்.
அதனால், இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், ஏற்கனவே மஸ்க்குடன் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்த ட்ரம்ப், தற்போது பேசுவதில் தனக்கு பிரச்னை இல்லை என்று கூறியிருப்பது, இருவருக்குமிடையேயான மோதல் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.





















