Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து தற்போது அவரிடம் சாம்சங் நிறுவனம் சிக்கியுள்ளது. அவர்களுக்கு என்ன மிரட்டல் விடுத்துள்ளார் தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது நாட்டின் வர்த்தகத்தை அதிகரிக்க, பல்வேறு நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது சாம்சங் நிறுவனத்தையும் மிரட்டியுள்ளார். அதன் விவரங்களை பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தை மிரட்டிய ட்ரம்ப்
உலக அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், ஐஃபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால், 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவை இந்தியா வழங்கி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இந்தியாவிற்கு கொண்டுவர, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் முற்றியபோது, உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. அதனால், இந்தியாவிலேயே மொத்த ஐ ஃபோன் உற்பத்தியையும் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே கூறியதற்கு நேர்மாறாக, ஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்காதீர்கள் என, ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிடம், ட்ரம்ப் தெரிவித்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து தெரிவித்திருந்த ட்ரம்ப், “டிம் குக்குடன் ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டதாகவும், அவரிடம், நீங்கள் என நண்பர், நான் உங்களை மிகவும் நன்றாகவே நடத்துகறேன், ஆனால் நீங்கள் பல பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இந்தியா முழுவதும் கட்டிடங்கள் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை“ என்று தெரிவித்ததாக கூறினார்.
இந்தி சூழ்நிலையில்தான், 2 நட்களுக்கு முன், ஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப். அதாவது, அமெரிக்காவில் அல்லாமல், வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு அங்கு விற்கப்படும் ஐஃபோன்களுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதுதான் அந்த எச்சரிக்கை. ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், அமெரிக்காவில் விற்கப்படும் ஐஃபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், இந்தியா அல்லது வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என்றும், ஆப்பிளின் டிம் குக்கிடம் வெகு நாட்களுக்கு முன்பே தெரிவித்ததாக கூறியுள்ளார். அப்படி இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு 25% வரியை கட்ட வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
சாம்சங் நிறுவனத்திற்கும் மிரட்டல் விடுத்துள்ள ட்ரம்ப்
இப்படிப்பட்ட சூழலில், ஆப்பிள் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட அதே எச்சரிக்கையைத் தான், ஐஃபோனின் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் தற்போது விடுத்துள்ளார் ட்ரம்ப்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், 25 சதவீத வரி விதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் உள்ளிட்ட இதுபோன்ற பொருட்களை தயாரிக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார். அப்படி இல்லையென்றால் அது நியாயமாக இருக்காது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அந்நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைத்தால் வரி இருக்காது என்றும், இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே எடுக்கப்படுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்ஃபோன்களை தென் கொரியா, இந்தியா, வியட்நாம், பிரேசில் நாடுகளில் தயாரிக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில், விநியோகம், உற்பத்தி மற்றும் பொறியியல் அறிவு போன்ற வளமான சுற்றுச்சூழல் அமைப்பு இல்லை.
இதனால், உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவது, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும். அதனால், அந்நிறுவனங்கள என்ன முடிவெடுக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















