‛5.56 கோடி ரூபாய் வீடு!’ - மின்சாரம், இணையம், நீர் எதுவும் இருக்காது... வேறு என்ன ஸ்பெஷல்?
பிரிட்டனின் டெவொன் கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் விலை சுமார் 5.5 லட்சம் பவுண்ட்கள். இந்திய மதிப்பில் 5.5 கோடி ரூபாய் மதிப்பு. இந்த வீட்டில் மின்சாரம், இணையம், நீர் ஆகிய வசதிகள் இல்லை.
கடலைப் பார்த்தபடி, அழகான வீடு ஒன்றில் இணைய வசதி, மின்சாரம், நல்ல குடிநீர் முதலானவை இல்லையென்ற போதும் உங்களால் செட்டில் ஆக முடியுமா? பிரிட்டனின் டெவொன் பகுதியில் கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் விலை சுமார் 5.5 லட்சம் பவுண்ட்கள். இந்திய மதிப்பில் 5.5 கோடி ரூபாய் மதிப்பு.
நேஷனல் டிரஸ்ட் சொந்தமாக வைத்திருக்கும் மேன்சாண்ட்ஸ் கடற்கரைக்கு அருகில் பெரிதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கிறது இந்த வீடு. இயற்கையோடு இணைந்த அழகான வாழ்க்கையை அளிக்கும் இந்த வீட்டில், சில குறைபாடுகள் இருப்பதால் இதனை வாங்க முடிவு செய்பவர்களும் இரு முறை யோசிக்கின்றனர்.
இந்த வீட்டில் மின்சாரம், இணையம் ஆகிய வசதிகள் இல்லை. நீருக்கான இணைப்புகளும் கட்டப்படவில்லை. எனினும், வீடு சிறிய குன்றின் மேல் இருக்கிறது. வெகு சில அடிகள் நடந்தால், கடலில் காலை நனைக்க முடியும்.
இந்த வீடு கரையோரப் பாதுகாப்பு காவலர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில். நெப்போலியன் காலத்தில் போரில் பிடிக்கப்பட்ட கைதிகளால் கட்டப்பட்ட மூன்று கட்டடங்களுள் இதுவும் ஒன்று. 1950கள் வரை கரையோரப் பாதுகாப்பு காவலர்கள் புகையிலை கடத்தல் வியாபாரிகளைக் கண்காணிக்க இந்த வீட்டைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது இது இரண்டு பெட்ரூம்களைக் கொண்ட வீடாக மாற்றப்பட்டுள்ளது.
வீட்டின் முன்புறம் ஒரு ஹால், மற்றொரு அறை, டைனிங் அறை, சமையல் அறை, இரண்டு பெட்ரூம்கள், ஒரு குளியல் அறை, பின் பக்கமாக தாழ்வாரம் ஒன்றும் இந்த வீட்டில் இடம்பெற்றிருக்கின்றன. நீர் இணைப்போ, மின்சார இணைப்போ இல்லாததால், இங்கு மிகச் சாதாரண வாழ்க்கைக்குப் பழகிக் கொள்ள வேண்டும்.
கேஸ் சிலிண்டரின் எல்.பி.ஜி மூலம் வெளிச்சம் தருவதற்காகவும், குளிரில் இருந்து காக்கும் ஹீட்டரும் இந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ளன. மழை நீர் சேகரிப்புத் திட்டம் மூலம் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் முன் புறம் உள்ள கிணற்றையும் தண்ணீருக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வீட்டை விற்பனை செய்யும் மிஷேல் ஸ்டீவன்ஸ் இதுகுறித்து பேசியுள்ளார். ‘கடற்கரை நேஷனல் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த இடம் அமைதியாகவும், அழகாகவும் இருக்கும். 15 நிமிடங்கள் நடந்தால், கார் நிறுத்தும் இடத்தை அடைந்து விடலாம். எனினும் இங்கு பெரும்பாலும் ஆள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருக்கும். வீட்டுக்குக் கீழ், சிறிய குகை ஒன்றும் இருக்கிறது. அதுவும் மிக அழகான இடம். கழிவறை வீட்டுக்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வீட்டை இதற்கு முன் பயன்படுத்தியவர்கள் இதனை விடுமுறைக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். வழக்கமான மன அழுத்தம் நிறைந்த நாள்களில் இருந்து விலகி, இங்கு வருபவர்கள் அலைகளின் ஓசையைக் கேட்டு அமைதி கொள்ளலாம். இவ்வளவு அழகான இடத்தில் இப்படியொரு வீடு விற்பனைக்கு வருவது அரிய வாய்ப்பு!’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.