USA Corona Cases Spike: அமெரிக்காவுக்கு பயம்காட்டும் ‛டெல்டா’ கொரோனா: ஒரே நாளில் ஒரு லட்சம்!
நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கே 100000 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனா இரண்டாம் அலை காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்து உருவான டெல்டா ரக கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் அச்சுறுத்தியது. இங்கிலாந்து அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளுக்கும் இந்தரகக் கொரோனா பரவியதை அடுத்து அங்கே பலி எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கிடையேதான் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இந்தியாவுக்குத் தடுப்பூசிகளைத் தருவதற்கு முன்வந்தது. இதனால் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இதையடுத்து தற்போது அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கே 100000 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆறுமாதங்களில் இல்லாத அளவுக்கான ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.
உலக அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 200 மில்லியனை எட்டியது. இதற்கிடையேதான் அமெரிக்காவின் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. தடுப்பூசி மிகக் குறைவாகச் செலுத்தப்பட்ட பகுதிகளில் டெல்டா ரக கொரோனா வைரஸ்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அது சர்வதேச அளவில் சுகாதாரக் கட்டமைப்பை பாதிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் இதுவரை 348,102,478 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எண்ணிக்கை கட்டுக்குள் இருந்த காரணத்தால் கட்டாய முகமூடி அணிய வேண்டும் என்கிற விதியையும் அமெரிக்கா தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 192,614,017 பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸும் 165,334,987 பேருக்கு இரண்டு டோஸ்களும் அங்கே செலுத்தப்பட்டுள்ளன.
The U.S. is working to give additional COVID-19 booster shots to Americans with compromised immune systems as quickly as possible, top U.S. infectious disease expert Dr. Anthony Fauci said https://t.co/9tYAgI118o pic.twitter.com/wGMI4OGRDb
— Reuters (@Reuters) August 6, 2021
அமெரிக்கா ஏழுநாள் சராசரியாக 95,000 புதிய கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே அங்கே கொரோனா பாதிப்பு ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.
அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபாஸி இந்த ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை இனி வரும் காலங்களில் 200,000 வரை அதிகரிக்கும் எனக் கணித்துள்ளார். டெல்டா ரக கொரோனா வைரஸ்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
டெல்டா வைரஸ் போல வேகமாகப் பரவுவதும் அதே நேரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனாவும் உருவாகும் நிலையில் நமது நிலை இன்னும் மோசமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவது தனக்காக மட்டும்தான் அதனால் போட்டுக்கொள்ளவேண்டாம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாம் தடுப்பூசி போடுவது நமக்காக மட்டுமல்ல.அடுத்தவர்களுக்காகவும்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.