(Source: ECI/ABP News/ABP Majha)
Rocket debris near Maldives | பரபரக்கும் மாலத்தீவு: கடலை நோக்கி வரும் சீனாவின் 18 டன் எடை ராக்கெட் பாகம்..
சீனா அனுப்பிய ஒரு ராக்கெட்டின் உடைந்த பாகமொன்று தற்போது இந்திய கடல் எல்லைக்குள் விழப்போகிறது.
உலக நாடுகள் தற்போது மாலத்தீவு குறித்து பேசிக்கொண்டுள்ளன. காரணம் சுற்றுலாவால் அல்ல, சீனாவால். சீனா அனுப்பிய ஒரு ராக்கெட்டின் உடைந்த பாகமொன்று தற்போது இந்திய கடல் எல்லைக்குள் விழப்போகிறது. குறிப்பாக மாலத்தீவு அருகே ராக்கெட்டின் பாகம் விழப்போவதால் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உடைந்த பாகம் என்றால் சிறிய பாகம் இல்லை, அதன் எடை 18 டன் ஆகும்.
சீனா விண்வெளியில் டியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. அந்த விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை சுமந்துகொண்டு கடந்த மாதம் 29-ஆம் தேதி, லாங்க் மார்ச் 5பி என்ற மிகப்பெரிய ராக்கெட் ஒன்று விண்ணை கிழித்துக்கொண்டு மேல்நோக்கிச் சென்றது. திடீரென்று ராக்கெட்டில் 108 அடி பாகமொன்று பூமியை நோக்கி விழத்தொடங்கியது. சீனாவின் நேரப்படி இன்று காலை 10.24 மணிப்படி, பூமியின் சுற்றுவட்டாரப்பகுதிக்குள் உடைந்த பாகம் நுழைந்துள்ளது. அது பயணிக்கும் திசைப்படி இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாலத்தீவு அருகே கடலில் விழும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த தகவலை சீனா தெரிவித்துள்ளது. பாகத்தின் பெரும்பாலான பகுதி எரிந்து விழுந்தால் பாதிப்பில்லை என்றும், ஆனாலும் உடைந்த பாகத்தின் உதிரி பாகங்கள் மக்கள் வசிக்கும் நிலப்பகுதிகள் வருமா என்பது குறித்து தெளிவான விளக்கம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பூமியை நோக்கி வருவது மிகப்பெரிய பாகம் என்பதால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இது குறித்து தெரிவித்துள்ள சீனா, ராக்கெட்டின் உடைந்த பாகம் பூமிக்குள் விழுவது வழக்கமான ஒன்றுதான். வழக்கமான ராக்கெட்டில் இருந்து வெளியேறும் பாகம் பூமிக்குள் வந்ததும் எரிந்து விழுந்துவிடும். மார்ச் 5பி ராக்கெட்டின் பாகத்தின் பெரும்பகுதியும் எரிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும் பாகத்தின் செயல்பாட்டை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.