(Source: ECI/ABP News/ABP Majha)
பிரிட்டன் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்த கிறிஸ்தவர்கள்.. அதிவேகமாக அதிகரிப்பவர்கள் யார்?
வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
உலகில் அதிகமானோர் பின்பற்றிவரும் மதங்களில் முதன்மையாக இருப்பது கிறிஸ்தவம். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 31.2 விழுக்காட்டினர் இந்த மதத்தை பின்பற்றி வருகின்றனர்.
அதற்கு அடித்தபடியாக இஸ்லாமை 24.1 விழுக்காட்டு மக்கள் பின்பற்றி வருகின்றனர். எந்த மதத்தையும் சாராதவர்கள் கிட்டத்தட்ட 16 சதவிகிதம் உள்ளனர். அதேபோல, 15.1 விழுக்காட்டினர் இந்து மதத்தை பின்பற்றி வருகின்றனர்.
கிறிஸ்தவ மதம் உலகம் முழுவதும் சென்று சேர்வதற்கு முக்கிய காரணியாக இருந்தது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான். குறிப்பாக, ஆங்கிலேயர்கள் சென்று ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் கிறிஸ்த மதத்தை பரப்பினர். அந்த வகையில், பிரிட்டன் அதில் மிக முக்கிய பங்கை ஆற்றியது.
இப்படியிருக்க, வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிவேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் அதிகம் பின்பற்றப்படும் மதமாக கிறிஸ்தவம் இருந்தாலும் அது வேகமாக குறைந்து வருகிறது. கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக, மதச்சார்பற்றவர்கள் அங்கு அதிகம் இருக்கின்றனர்.
இதுகுறித்து யார்க் பேராயர் ஸ்டீபன் காட்ரெல் கூறுகையில், "கிறிஸ்தவர்களின் விகிதம் காலப்போக்கில் குறைந்து வருவதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஐரோப்பாவில் வாழ்க்கை தரம் அதிகரித்து அது நெருக்கடியாக மாறி வருகிறது. போர் காலத்திற்கு மத்தியில், அதை எதிர்கொள்ளும் மக்களுக்கு இன்னும் ஆன்மீகம் தேவைப்படுகிறது.
பல சமயங்களில் உணவும் அரவணைப்பும் வழங்கி அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். கிறிஸ்துமஸை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் இன்னும் எங்கள் சமயத்திற்கு வருவார்கள். அதே நேரத்தில், நாம் நமது அருகாமைக்கு அப்பாலும் பார்க்கிறோம். நாம் ஒரு உலகளாவிய நம்பிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறோம்" என்றார்.
மதம் தொடர்பான கேள்வி, கடந்த 2001ஆம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டது. மதம் தொடர்பான கேள்விக்கு தானாக முன்வந்து பதில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், 94.0 சதவிகிதம் பேர் தான் பின்பற்றும் மதம் குறித்து வெளிப்படையாக பதில் அளித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 27.5 மில்லியன் மக்கள் அல்லது 46.2 சதவீதம் பேர் தங்களை கிறிஸ்தவர்கள் என அடையாளப்படுத்தி கொள்கின்றனர். இது 2011 இல் இருந்து 13.1 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. எந்த மதத்தையும் சாராதவர்களின் எண்ணிக்கை 12 சதவிகித புள்ளிகள் உயர்ந்து 37.2 சதவிகிதம் உள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 22.2 மில்லியன் (தோராயமாக 2 கோடியே 20 லட்சம்) பேர்.
பிரிட்டன் மக்கள் தொகையில் 6.5 சதவிகிதம் பேர் அதாவது 3.9 மில்லியன் (3 கோடியே 90 லட்சம் பேர்) இஸ்லாமியர்கள் ஆவர். கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை காட்டிலும் 4.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இந்துக்கள் 10 லட்சம் பேரும் சீக்கியர்கள் 5,24,000 பேரும் உள்ளனர்.