UK Prime Minister Resignation: சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு..அமைச்சர்கள் ராஜினாமா.. பதவி விலகினார் போரிஸ் ஜான்சன்..
கடந்த ஜூலை 5 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த போரிஸ், கிறிஸ் பின்ச் பற்றிய குற்றச்சாட்டு குறித்து தெரிந்திருந்த போதும், அவரைத் துணை கொறடாவாக நியமித்தது எனது தவறு தான் என கூறினார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் போரிஸ் ஜான்சனுக்கு புதிதல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அவர் மாபெரும் வெற்றி பெற்றார். இதனிடையே 2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு அமைந்துள்ள டவுனிங் தெருவில் அவர் பார்ட்டி நடத்தியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் எழுந்தது.
முதலில் இதனை பிரதமர் அலுவலக வட்டாரங்கள் மறுத்த நிலையில் பின் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சொந்த கட்சியை சேர்ந்த எம்பிக்களே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக 211 எம்பிக்கள் வாக்களித்த நிலையில், அவருக்கு எதிராக 148 பேர் வாக்களித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த தலைவலியாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் செய்த செயல் ஒன்று அமைந்தது.
Prime Minister: this is not sustainable and it will only get worse: for you, for the Conservative Party and most importantly of all the country. You must do the right thing and go now. pic.twitter.com/F2iKT1PhvC
— Nadhim Zahawi (@nadhimzahawi) July 7, 2022
கடந்த பிப்ரவரி மாதம் தனது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பின்ச்சரை அவர் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அரசின் துணைக் கொறடாவாக போரிஸ் ஜான்சன் நியமித்தார். இதனிடையே கடந்த ஜூன் 29 ஆம் தேதி கிறிஸ் பின்ச் கிளப் ஒன்றில் அதிகளவு மது அருந்தி விட்டு இரண்டு ஆண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தகராறும் செய்துள்ளார். இது பூதாகரமாக வெடித்ததும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை 5 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த போரிஸ், கிறிஸ் பின்ச் பற்றிய குற்றச்சாட்டு குறித்து தெரிந்திருந்த போதும், அவரைத் துணை கொறடாவாக நியமித்தது எனது தவறு தான் என கூறினார். இதற்காக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். இதனை காரணம் காட்டி அந்நாட்டின் நிதியமைச்சரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் க்வின்ஸும் ராஜினாமா செய்ய போரிஸூக்கு நெருக்கடி ஆரம்பித்தது.
மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின், துணைத் தலைவர் பிம் அஃபோலமி, வர்த்தக தூதர் ஆண்ட்ரூ, ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய பரபரப்பான சூழல் நிலவத் தொடங்கியது. சொந்தக் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என இருவரும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமாவை அறிவித்துள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்