இம்ரான் கானுக்கு செக்.. நவாஸ் ஷெரீப்புடன் கைகோர்க்கும் பிலாவல் பூட்டோ.. பாகிஸ்தான் அடுத்த பிரதமர் யார்?
புதிய அரசாங்கத்தை அமைக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:
எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில் ஒரு வேட்பாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு இடத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 102 இடங்களில் வெற்றிபெற்றனர்.
அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது. மற்றவர்கள், 28 இடங்களில் வெற்றிபெற்றனர்.
தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக, பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அடுத்த பிரதமர் யார்?
இந்த நிலையில், புதிய அரசாங்கத்தை அமைக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவு அளித்தாலும், நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணையாது என கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ கூறுகையில், "பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். மத்தியில் ஆட்சி அமைக்க எனது கட்சிக்கு போதுமான எண்ணிக்கை இல்லை. அதே சமயத்தில், சுயேட்சைகள் தலைமையிலான அரசுக்கும் வாய்ப்பில்லை.
இந்த அவை அரசாங்கத்தை அமைக்கத் தவறினால், நாடு மீண்டும் தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும். எனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். இதையடுத்து, நவாஸ் ஷெரீப் கட்சியும் பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார்.