900 பேரை ஒரே ஜூம் காலில் பணிநீக்கம் செய்த விஷால் கார்க்: பெட்டர்.காம்-இல் என்ன நடக்கிறது?
250 பேருக்கு மேல் 8 மணி நேர வேலைக்கான சம்பளம் வாங்கிக்கொண்டு 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கிறீர்கள், அவர்கள் நிறுவனத்திடம் இருந்தும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் திருடுகிறார்கள் .
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கர்க் 'பெட்டர் டாட் காம்' என்ற வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனத்தை கூட்டாக துவக்கினார். இந்த வலைதளத்தில் புரோக்கர் கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம். ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவிலும் வெளிப்படைத் தன்மை இருந்ததால் அந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் விஷால் கார்க் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக 3 நிமிடங்களில் ஊழியர்கள், 900 பேரை திடீரென வேலை நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளார். மொத்த ஊழியர்களில் 15 சதவீதம் பேர் வேலையிழப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு வேலையில் மந்தம், செயல்பாடுகளில் திறமையின்மை, உற்பத்தி திறன் குறைவு ஆகிய காரணங்களை விஷால் கார்க் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சந்தையில் போட்டிகள் அதிகரித்துவிட்டன, தீவிரமாக செயல்பட்டால் மட்டுமே நிறுவனத்தின் முன்னணி மதிப்பை தக்கவைக்க இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த ஜூம் விடியோ காலில்,"இந்த செய்தியை நீங்கள் யாரும் கேட்க விரும்பப்போவதில்லை, ஆனால் அந்த முடிவை எடுத்துதான் ஆக வேண்டும், இந்த முடிவை நான் எடுப்பது இது இரண்டாவது முறை, முதல் முறை நான் அழுதேன், ஆனால் இம்முறை வலிமையோடு இருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்கும் இந்த முடிவை எடுப்பதில் விருப்பம் இல்லைதான், ஆனால் இது முக்கியமான முடிவாக இருக்கும். நீங்கள் இந்த விடியோ காலில் இருக்கிறீர்கள் என்றால், துரதிர்ஷ்டவசமானவர்கள் என்று அர்த்தம். இதில் இருக்கும் அத்தனை பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள். உங்களுக்கே தெரியும் இதில் 250 பேருக்கு மேல் 8 மணி நேர வேலைக்கான சம்பளம் வாங்கிக்கொண்டு 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கிறீர்கள் என்று. அவர்கள் நிறுவனத்திடம் இருந்தும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் திருடுகிறார்கள் என்று அர்த்தம். எனவே இந்த நிறுவனத்தில் இருந்து 15 சதவிகித பணியாளர்கள் நீக்கப் படுகிறார்கள்" என்று விஷால் கார்க் கூறியிருக்கிறார்.
பெட்டர் டாட் காம் நிறுவனம் நீக்கப்பட்ட பணியாளர்களின் வேலையை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பணியாளரும் எத்தனை க்ளைன்ட் மீட்டிங் செய்துள்ளார்கள், எத்தனை ஃபோன் கால்கள் செய்துள்ளார்கள், எத்தனை இன்கமிங் கால்களை பேசியுள்ளார்கள், எத்தனை கால்கள் மிஸ்டு காலாக மாறியுள்ளது என்பதையெல்லாம் ஆராய்ந்த பின்னரே, அத்தனை தரவுகளோடும் வேலையிலிருந்து நீக்கி உள்ளனர். இதனால் அந்த நிறுவனம் மட்டுமின்றி பணிகளை வழங்கும் வாடிக்கை நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் விஷால் 900 ஊழியர்களை நீக்கியது அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இவர் ஏற்கனவே வேலையை விரைவாகச் செய்யும்படி ஊழியர்களை கடுமையாக திட்டி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.