Barack Obama on Instagram | உயிர் நண்பனை பறிகொடுத்த ஒபாமா.. இன்ஸ்டாகிராமில் உருக்கம்..
அந்தக் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த போ தற்போது புற்றுநோயால் தனது 12-வது வயதில் இறந்ததை அடுத்துத் தனது உற்ற நண்பனுக்கு இன்ஸ்டாகிராமில் பிரியாவிடை கொடுத்ததை உருக்கமாக தெரிவித்திருக்கிறார் ஒபாமா.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது உண்மையான நண்பனையும், விசுவாசமான தோழனை இழந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் குடும்பம் வளர்த்த நாய் உயிர் இழந்ததையடுத்து அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 44-வது அதிபராக 2009 முதல் 2017 வரை பதவி வகித்தவர் பராக் ஒபாமா. பதவியில் இருந்த காலத்தில் ஒபாமா- மிஷெல் வெள்ளை மாளிகையில் ’போ’ மற்றும் ’சன்னி’ (Bo and Sunny) என்கிற இரு போர்ச்சுகீசிய வாட்டர்டாக் வகை நாய்களை வளர்த்தார்கள். அமெரிக்காவின் முதல் நாய் (Dog no.1) எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ‘போ’ புற்றுநோய் பாதிப்பு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளது.
ஒபாமா குடும்பத்தினர் வெள்ளை மாளிகைக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட ’போ’வுக்கு பாரக் ஒபாமா என்கிற பெயரின் முதல் எழுத்துகள் கொண்டு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒபாமாக்களிடம் வந்து சேர்வதற்கு முன்பு இரண்டு வீடுகளில் தத்தெடுக்கப்பட்ட ’போ’ அங்கே அவர்களுடன் பொருந்திப்போக முடியாமல் இறுதியாக ஒபாமாவிடம் வந்து சேர்ந்தவன். 2016-ஆம் ஆண்டு டக்கோட்டாவைச் சேர்ந்த ஸ்காட் என்னும் நபர் ’போ’வைக் கடத்த முயற்சி செய்யும் அளவுக்கு சுட்டியும் துருதுருப்பும் நிறைந்த ’போ’ அமெரிக்க மீடியாக்களில் பிரபலமாகியிருந்தான்.
’வெள்ளை மாளிகையில் உங்களது அலுவலகத்துக்குள் ’போ’வை அனுமதிப்பீர்களா?’ என்று பத்திரிகையாளர் ஒருவர் ஒபாமாவைக் கேட்டதற்கு ‘நிச்சயமாக’ எனச் சிரித்தபடி பதில் சொன்னார் அவர். இத்தனை வருடங்களில் அந்தக் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த போ தற்போது புற்றுநோயால் தனது 12-வது வயதில் இறந்ததையடுத்து தனது உற்ற நண்பனுக்கு இன்ஸ்டாகிராமில் பிரியாவிடை கொடுத்திருக்கிறார் ஒபாமா. அதில்,’இன்று எங்கள் குடும்பம் ஒரு உற்ற நண்பனை விசுவாசமான தோழனை இழந்தது. 10 வருடங்களுக்கும் மேலாக ‘போ’ எங்கள் வாழ்வின் நிரந்தர பக்கமாகவும், ஒரு மென்மையான அங்கமாகவும் இருந்துள்ளான். நல்ல நாட்கள், மோசமான நாட்கள் என இப்படி எல்லா நாட்களிலும் எங்களோடு இருப்பதும் எங்களைப் பார்ப்பதும்தான் அவனுக்கு மகிழ்ச்சி.
வெள்ளை மாளிகை நாயாக இருப்பதால் ஏற்படும் அத்தனை சச்சரவுகளையும் பொறுமையுடன் சளைக்காது எதிர்கொண்டவன். அவனது கறுத்த முடிதான் அவனுக்கு அழகு. எங்களுக்குத் தேவையானவனாகவும் சில நேரங்களில் எங்கள் தேவைக்கு அதீதமானவனாகவும் இருந்தவன்.அவனது இழப்பு ஈடுசெய்யமுடியாதது’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஒபாமாவின் இந்த நெகிழ்வான பதிவு ‘போ’வை நேசித்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

