(Source: ECI/ABP News/ABP Majha)
Bird Flu: இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பரவிய பறவைக் காய்ச்சல்: உலக சுகாதார நிறுவனம் அச்சம்!
இந்த வைரஸின் மூலம் (source) தற்போது சரியாகத் தெரியவில்லை என்றாலும் இந்தியாவில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் இருந்து H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஆஸ்திரேலியாவுக்குப் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறும்போது, ’’ஜூன் 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தையிடம் H5N1 வகை பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. இந்தக் காய்ச்சல் இந்தியாவில் இருந்து பரவியிருக்கலாம் என்று நினைக்கிறோம். அந்தக் குழந்தை கடந்த மாதம் கொல்கத்தாவுக்குச் சென்று திரும்பியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
எனினும் அந்தக் குடும்பத்தினர், தங்களுக்குத் தெரிந்த மக்கள் அல்லது விலங்குகள் மூலம் காய்ச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கோழிகளிடம் H5N1 வகை நோய்த் தொற்று
மரபணு மாற்றம் நடைபெற்ற H5N1 வகை வைரஸ் தென் கிழக்கு ஆசியாவில் அதிகம் பரவியது. மனிதர்கள் மற்றும் கோழிகளில் இந்த நோய்த்தொற்று முக்கியமாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் மூலம் (source) தற்போது சரியாகத் தெரியவில்லை என்றாலும் இந்தியாவில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விக்டோரியா மாகாணத்தில் இருந்து 2 வயதுப் பெண் குழந்தை பிப்ரவரி 12 முதல் 19ஆம் தேதி வரை கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளது. மீண்டும் மார்ச் 1ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளது. மே 22ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் உள்ள நெருங்கிய உறவினர்களுக்கு எத்தகைய அறிகுறிகளும் ஏற்படவில்லை.
மார்ச் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, 2 வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
நோய்த்தொற்று எப்படிப் பரவுகிறது?
வழக்கமாக கோழிப் பண்ணைக்குச் சென்றோ, உயிருள்ள பறவைகள், விலங்குகள் இருக்கும் சந்தைக்குச் சென்றோ வீட்டில் இருக்கும் பறவைகளிடம் தொடர்பில் இருந்தோ நோய்த் தொற்று கோழிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும். அரிதாக பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சி அல்லது முட்டைகளைக் கையாள்வதன் மூலமும் பறவைக் காய்ச்சல் பரவும். இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று விக்டோரியா மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.