Turkey Earthquake: நிலநடுக்கத்தால் அழியும் துருக்கி? சரிந்த வரலாற்று கோட்டை:10,000 பேர் பலியாக வாய்ப்பு?
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை, 10 ஆயிரம் ஆக அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
1600 பேர் பலி:
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியை தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து தரைமட்டமாகின. சிரியாவில் பாதிப்பு சற்றே குறைவாக இருந்தாலும், துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மட்டுமின்றி, அந்நாட்டில் இருந்த 2,200 ஆண்டுகள் பழமையான காசியண்டெப் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும் தரைமட்டமாகின. தற்போது வரை இரு நாடுகளிலும் சேர்த்து ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை விரைவு படுத்தும் நோக்கில், இந்தியா சார்பிலும் 100 பேரை கொண்ட மீட்பு குழு துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளது.
அமெரிக்காவின் கணிப்பு:
காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பிற்பகலிலும், ரிக்டர் அளவில் 7.6 என்ற அளவிலான மேலும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், நிலநடுக்கதால் துருக்கியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.
காரணம் என்ன?
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். கட்டடங்களில் இருந்து உடனடியாக வெளியேற முடியாததால் பலி எண்ணிக்கை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் அழியும் துருக்கி?
அனடோலியன் தட்டில் அமர்ந்திப்பதால், நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக துருக்கி உள்ளது. யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ள துருக்கியை, ஒரு பெரிய நிலநடுக்கம் அழிக்கும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். ஆனாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமல், பரவலான கட்டடங்களை துருக்கி அரசு அனுமதித்துள்ளது.
மோசமான நிலநடுக்கங்கள்:
கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 17 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகினர். 2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக, 2011ஆம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் பேர் பலியாகலாம் என அமெரிக்கா கணித்துள்ளது. இதன் மூலம், துருக்கியின் இரண்டாவது மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகலாம்.