Crude Oil Import: இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
Russia Crude Oil: அமெரிக்காவின் தொடர் அழுத்தத்தையடுத்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்ப்போம்.
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை டிசம்பர் முதல் குறைக்கும் இந்தியா
ரஷ்யாவிலிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதை, அடுத்த மாதம் முதல் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கடல்சார் ஆய்வு நிறுவனமான கெப்லர்(KPLER), ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் அதிக பங்கு கொண்டுள்ள இந்திய நிறுவனங்கள், அடுத்த மாதம் முதல் நேரடி இறக்குமதியை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம், பொதுத்துறையைச் சேர்ந்த மங்களூரு ரிபைனரி மற்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மிட்டல் எனர்ஜி நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நயாரா எனர்ஜி நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது. இதனால், டிசம்பர் மாதம் முதல், ரஷ்ய கச்சா எண்ணெய் வரத்து குறையும் எனவும், ஆனாலும் முற்றிலும் நிறுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நேரடி இறக்குமதி குறைக்கப்பட்டாலம், இடைத் தரகர்கள் மற்றும் பிற வர்த்தக வழிமறைகள் மூலம், இந்தியாவில் அடுத்த அண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
பிற நாடுகளிடம் கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய்
ரஷ்ய இறக்குமதி குறைப்பை ஈடு செய்யும் வகையில், மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா ஆகிய மாற்று இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக முதலிடத்தில் இருந்தது ரஷ்யா. அதைத் தொடர்ந்து, ஈராக், சவுதி அரேபியா நாடுகள் இருந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் தடையை அடுத்து, ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் மற்றும் லூகோயில் நிறுவனங்களிடமிருந்து நேரடி கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தவோ அல்லது குறைக்கவோ செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தடை அறிவிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் அந்நாட்டிலிருந்தே அதிக அளவிலான கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. இதே நேரத்தில், கடந்த 21-ம் தேதிக்குப் பின்னர், இறக்குமதி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















