Afghanistan Ambassador | ஆஃப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தல்.. கட்டிவைத்து சித்திரவதை!
பாகிஸ்தானுக்கான ஆஃப்கானிஸ்தான் தூதரின் 26 வயது மகளை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று கடத்தியுள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏனென்றால், தாலிபான் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் இராணுவப்படைகள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி மரணம் அடைந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கான ஆஃப்கானிஸ்தான் தூதரின் மகள் நேற்று இஸ்லாமாபாத் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகேலின் 26 வயது மகளான சில்சிலா அலிகேல் நேற்று பகலில் வெளியே சென்றுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அப்போது அவரை அடையாள தெரிய மர்ம நபர்கள் கும்பல் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக அவரை கட்டி வைத்து சித்தரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில்,"நேற்று எங்கள் நாட்டு தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு 5 மணி நேரத்திற்கும் மேலாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடம்பில் கயிறு கட்டியது போன்ற சில காயங்கள் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை ஆஃப்கானிஸ்தான் அரசு அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம்,"இது மிகவும் வருந்தத்தக்க செயல். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இந்த வேலையை செய்துள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் தூதர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆகியோருக்கு அதிகளவில் தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தாககவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இது ஆஃப்கானிஸ்தான் அரசை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. தாலிபான் படைகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவிகளை செய்து வருகிறது என்று தொடர்ச்சியாக ஆஃப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வந்தது. இதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆஃப்கானிஸ்தானில் பெரியளவில் போர் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. அதை தற்போது அங்கும் நிலவும் சூழல் உறுதி படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 'மண்டேலா’ மனித இனத்தின் மாபெரும் பொக்கிஷம்..!