Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Walkie Talkies Blast: லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி-டாக்கீஸ் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Walkie Talkies Blast: லெபனானில் அடுத்தடுத்து வாக்கி-டாக்கீஸ் வெடித்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வாக்கி-டாக்கீஸ் வெடித்து 14 பேர் உயிரிழப்பு:
முன்னதாக, கடந்த செவ்வாயன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்ததில், 10-க்கும் மேற்படோர் உயிரிழந்த நிலையில் சுமார் 3000 பேர் காயமடைந்தனர். ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பேஜர்கள் வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, பெய்ரூட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வாக்கி-டாக்கீஸ் மற்றும் சோலார் கருவிகள் வெடித்தன. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் அதன் உறுப்பினர்களா அல்லது குழுவுடன் தொடர்பு இல்லாத பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்களா என்பதை போராளிகள் குழுவான ஹிஸ்புல்லா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
'போரில் புதிய கட்டம்' என்று இஸ்ரேல் அறிவிப்பு:
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant புதன்கிழமை அந்நாட்டு படையினரிடம் உரையாற்றினார். அப்போது, "நாம் போரில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். அதற்கு தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை" என குறிப்பிட்டு இருந்தார். லெபனான் வெடிப்புகள் பற்றி அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், இஸ்ரேலின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார். "முடிவுகள் மிகவும் ஈர்க்கக்கூடியவை" என்று குறிப்பிட்டார். இஸ்ரேலிடமிருந்து நேரடி உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், இந்தத் தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பரவலாக நம்பப்படுகிறது.
ஹிஸ்புல்லா-இஸ்ரேல் மோதல்:
ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறைகள், நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் ஒரு முழுமையான போராக விரிவடையும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது ராணுவ குவிப்பை சமீபத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
காஸா போரைத் தூண்டிய தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலைத் தொடர்ந்து அக்டோபர் 8 முதல் நடந்து வரும் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலுக்கு மத்தியில் இந்த பேஜர் மற்றும் வாக்கி-டாக்கீஸ் தாக்குதல்கள் வந்துள்ளன. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா அதன் நட்பு நாடான ஹமாஸுக்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலிய தலைவர்கள் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. சபை கோரிக்கை:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைத் தலைவர் வோல்கர் டர்க், லெபனானில் நடந்த பேஜர் மறும் வாக்கி-டாக்கீஸ் வெடிப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்து, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அச்சமும் பயங்கரமும் ஆழமானது என்று கூறினார். மக்கள் அமைதி மற்றும் பாதுகாப்போடு வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்க உலகத் தலைவர்களை வலியுறுத்தினார்
பேஜர் வெடிப்பு விவரங்கள்:
ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள BAC கன்சல்டிங் KFT என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட AR-924 மாதிரிகள் என அடையாளம் காணப்பட்ட பேஜர்களில் சிறிய அளவிலான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. தைவானிய நிறுவனமான கோல்ட் அப்பல்லோவின் பிராண்ட் அந்த சாதனங்களில் தோன்றியது. ஆனால், பேஜர்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு BAC மட்டுமே பொறுப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது.