விண்வெளி செல்லும் 2 வது இந்தியப்பெண்; வானில் பறக்கும் சிறு வயது கனவு நனவாகிறது!
கடந்த 2015-ம் ஆண்டு ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சிரிஷா தற்போது அந்த நிறுவனத்தின் அரசாங்க விவகாரங்களின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார்.
கல்பனா சாவ்லாவிற்கு அடுத்து இந்தியப் பெண் சிரிஷா பாண்ட்லா விண்வெளிக்குச் செல்லவுள்ளார். சிறு வயதில் இருந்த வானில் பறக்க வேண்டும் என்று ஆசையினை தனது விடா முயற்சியுடன் அடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
சிறுவயது கனவினை அடைய விடா முயற்சியுடன் போராடினால் அதற்குரிய வெற்றியினை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கியுள்ளார் சிரிஷா பாண்ட்லா. இவரால் இந்தியர்களுக்கு பெருமை என்றே கூறலாம். ஆந்திரா மாநிலம் குண்டூரில் பிறந்தவர் தான் சிரிஷா. ஆனாலும் அவர் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் டெக்சாஸின் ஹூஸ்டனில்தான். இவர் அங்குள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். இதனிடையே தான் கடந்த 2015-ம் ஆண்டு ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சிரிஷா தற்போது அந்த நிறுவனத்தின் அரசாங்க விவகாரங்களின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே வானில பறப்பது தான் மிகுந்த கனவாக இருந்துள்ளது. அதற்கான முயற்சிகளையெல்லாம் தேடிய நிலையில் தான் தற்பொழுது அதில் வெற்றியும் அடையவுள்ளார்.
ஆம். பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய விண்வெளி சுற்றுலா நிறுவனம் விர்ஜின் கேலடிகின் முதல் சோதனை பயணத்தில் விண்வெளிக்கு பறக்கவுள்ளார் சிரிஷா பாண்ட்லா. இந்த நிறுவனம் 5 பேர் கொண்ட குழுவுடன் தனது முதல் சோதனைப் பயணமாக வரும் ஜூலை 11-ம் தேதி விண்வெளிக்குச் செல்லவிருக்கிறது. இந்தப் பயணத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணான சிரிஷா பாண்ட்லா என்பவரும் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக கல்பனா சாவ்லாவுக்கு அடுத்து விண்வெளிக்குச் செல்லவுள்ள இந்தியாவில் பிறந்த 2 வது பெண் என்ற பெருமையினையும் கொண்டுள்ளார் சிரிஷா பாண்ட்லா. #unity22 எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த இந்த விண்வெளி பயணத்திற்கு விர்ஜின் கேலடிக் நிறுவனத்தை நிறுவிய ரிச்சர்ட் பிரான்சன் தலைமை ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பயணமானது வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் விண்வெளிக்கு செல்வதற்கு முன்பாக இது நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இப்பயணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சிரிஷா பாண்ட்லா, ``#Unity22ன் அற்புதமான குழுவின் ஒரு பகுதியாக நானும் இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் வாய்ப்பளித்தே இந்நிறுவனத்தின் நோக்கம் எனவும், ஜூலை 11 அன்று நடைபெறவுள்ள புதிய விண்வெளி யுகத்தின் தொடக்கத்தில் எங்களுடன் சேருங்கள் என்றும் அதன் கவுண்டவுன் தொடங்குகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப்பயணம் குறித்து முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய வம்சாவளி பெண்கள் தொடர்ந்து தடைகளை உடைத்து தங்களின் திறனை அந்நிய மண்ணில் நிரூபித்து வருகிறார்கள் எனவும் தெலுங்கு தேசத்தை பூர்வீகமாக கொண்ட சிரிஷா பாண்ட்லா, புதிய விண்வெளி யுகத்தின் விடியலைக் குறிக்கும் ஒரு பயணத்துக்கு பறக்கத் தயாராகி, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறார்! என்று வாழ்த்து உள்ளார்.
இதோடு சிர்ஷா பாண்ட்லா மிகவும் தைரியமானவர், வாழ்க்கையில் முடிவெடுப்பதில் வலிமையான இவர், ஆரம்பத்தில் இருந்தே வானில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுவார் என அவரது தாத்தா டாக்டர். ராகையா கூறினார். இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி என் பேத்தி சிரிஷா விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ளார் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், வெற்றிக்கரமாக பயணத்தினை முடித்து வர நானும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துவதாகவும் சிரிஷா தாத்தாவின் ராகையா தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டுமில்லாமல் விண்வெளிக்குச் செல்லும் சிரிஷா பாண்ட்லா வெற்றியுடன் திரும்பி வர வேண்டும் எனவும், அவரது இலக்கின் உச்சியினை அடைய வேண்டும் என இந்தியர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.