விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பிலிருந்த இடம் மீட்பு
3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான இடத்தினையும் 40 வருடங்களாக நீர் செல்லாமல் இருந்த ஏரி வாய்க்கால் மேல் இருந்த கட்டிடங்களை இடித்து வாய்க்காலை மீட்டனர்.
விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பிலிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான இடத்திலிருந்த கட்டிடத்தினை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றி ஏரிவாய்க்காலை மீட்டனர்.
40 ஆண்டுகளாக வீடு மற்றும் தேநீர் கடையினை கட்டி ஆக்கிரமிப்பு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஏரி வாய்க்காலில் இருந்து நீர் செல்வதற்கான வாய்க்காலை வெங்கடேசன் என்பவர் ஆக்கிரமித்து 40 ஆண்டுகளாக வீடு மற்றும் தேநீர் கடையினை கட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆட்சியர் அலுவலக ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தினை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர் வெங்கடேசன் தனது தரப்பு வழக்கறிஞர்கள், உறவினர்களை கொண்டு இடிக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக கட்டிடதினை இடிக்ககூடாது என வழக்கறிஞர்களும் கடை உரிமையாளரும் வாக்குவதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கட்டிடத்தினை இடிக்க முடியாமல் திணறிய தாசில்தார் ஆட்சியர் ஆக்கிரமிப்பு கட்டிடத்தினை இடிக்கவிடாமல் தடுப்பதாக கூறியபோது, ஆட்சியர் இடித்துவிட்டு தான் வரவேண்டுமென கடுமையாக கூறியதை தொடர்ந்து மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான இடத்தினையும் 40 வருடங்களாக நீர் செல்லாமல் இருந்த ஏரி வாய்க்கால் மேல் இருந்த கட்டிடங்களை இடித்து ஏரி வாய்க்காலை மீட்டனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.