8 வருட போராட்டத்துக்கு பின் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் - மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி
விழுப்புரம்: 8 வருட போராட்டங்களுக்கு பின் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கிய மாற்றுத்திறனாளி
விழுப்புரத்தில் 8 வருட போராட்டங்களுக்கு பின் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கிய முதுகு தண்டுவடம் பாதித்த நபர்.
விழுப்புரம் மாவட்ட கணக்கன் குப்பத்தை சேர்ந்த மரியா ஆனந்த்தான். இவர் கடந்த 8 வருடங்களாக இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்குவதற்கு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தார். இந்த நிலையில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இவருக்கு வாகனம் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கடந்த 8 வருடங்களாக மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளிடம் மனு அளித்தேன். ஆனால், யாரும் செவிசாய்க்கவில்லை, நான் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பேரில் அமைச்சர் பொன்முடி எனக்கு வாகனத்தை வழங்கினார்” என்றார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபொழுது உடல் ஊனமுற்றவர்கள் என்பதனை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் என அறிவித்தார். அவர்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தாங்களாகவே சுதந்திரமாக இயங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் வாழ்வினை மேம்படுத்திடும் வகையில் இத்துறையினை தானே கவனித்துக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதியன்று நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் ரூ.1000- உதவித்தொகையினை ரூ.1500- ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் 40,312 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும் 21,210 சிறப்பு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அனைவருக்கும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும் வாய் பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகளில் கற்பிக்கவும் பயிற்சி வழங்கவும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமித்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு சார்பில் 2 பள்ளிகளும் தனியார் சார்பில் 3 பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கல்வி பயின்றிட வேண்டும். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் கல்லூரிகள் பொது இடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி பார்வையற்றவர்களுக்கான குறியீடு கழிவறை வசதி உள்ளிட்டவற்றோடு கட்டிடங்கள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மெரினா கடற்கரையினை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பார்த்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சக்கர நாற்காலி செல்லும் வகையில் மரப்பலகையில் வழிப்பாதையினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிடும் வகையில் நமது மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39,22,000 மதிப்பீட்டில் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலியும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,99,331 மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரும், பார்வையற்ற 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,84,529 மதிப்பீட்டில் தக்க செயலியுடன் கூடிய திறன்பேசியும் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,64,160 மதிப்பீட்டில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரமும் செவித்திறன் பாதித்த 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 580 மதிப்பீட்டில் நவீன காதொலிக் கருவி என மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4700600 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் கொண்ட நீங்கள் அனைவரும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுகிறது. இதனை நீங்கள் அனைவரும் சிறப்பாக பயன்படுத்தி சமூகத்தில் தங்களுக்கான இடத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.