Villupuram: விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்.. ரூ.7 கோடிக்கு தீர்க்கப்பட்ட 386 வழக்குகள்!
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 386 வழக்குகளுக்கு ரூ.7 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஆர்.பூர்ணிமா தலைமை தாங்கினார்.
தலைமை நீதிபதி ஆர்.பூர்ணிமா பேசியதாவது:-
3 மாதங்களுக்கு ஒருமுறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மோட்டார் வாகன விபத்து போன்ற பல்வேறு வழக்குகளை தனித்தனியாக பிரித்து தனித்தனியே மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைவரும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணத்தை பதிவு செய்தாக வேண்டும். கட்டாய திருமண பதிவுச்சட்டத்தின்படி, திருமணத்தை பதிவு செய்தாக வேண்டும். பெரிய மண்டபத்தில் செலவு செய்து திருமணம் நடத்துபவர்கள், திருமணத்தை பதிவு செய்வதில்லை. அதை பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வும் வரவில்லை.
பிறப்பு, இறப்பு பதிவு :
பிறப்பு, இறப்பை பதிவு செய்ய தவறியவர்கள் சட்ட உதவி மையத்தை நாடினால், அவர்களுக்குரிய உதவியை செய்துதர தயாராக உள்ளோம். 11 சதவீத மக்கள்தான் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கோரி நீதிமன்றங்களை நாடுகிறார்கள். அதற்கே இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அதிகளவில் மக்கள் நீதிமன்றங்களை நாடினால் என்ன ஆகும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே வழக்குகளில் பேசி தீர்வு காண வேண்டும். அதுபோன்ற நிலைக்காகத்தான் இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் வழக்குகளை விரைந்து முடிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்முகாமிற்கு கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்செல்வன், முதன்மை சார்பு நீதிபதி (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாதாமஸ் அனைவரையும் வரவேற்றார். எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்யஜோதி, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவர்மன், அரசு வக்கீல் நடராஜன், வக்கீல் சங்க தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் அரசு வக்கீல் வேலவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
386 வழக்குகள் தீர்வு:
இம்முகாமில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்டவை எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசமாக விசாரிக்கப்பட்டது.அதுபோல் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
இம்முகாமில் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 386 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.6 கோடியே 99 லட்சத்து 18 ஆயிரத்து 696-க்கு தீர்வு காணப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், வானூர் ஆகிய நீதிமன்றங்களில் 9 அமர்வுகள் கொண்ட நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனர்.