ஆளுநர் - முதல்வர் மோதலால் எவ்வளவு கோடி அரசு நிதி வீணடிப்பு தெரியுமா..?
புதுச்சேரி ஆளுநர் மாளிகை பாதுகாப்பிற்கு 1.28 கோடி அரசின் நிதி வீணடிப்பு - ஆர்டிஐ தகவல் மூலம் மத்திய உள்துறைச் செயலரிடம் புகார்.
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் அமைச்சரவையினர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பால், ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை வரவழைத்ததால் ரூ.1.28 கோடி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் ஏற்பட்ட அதிகார போட்டியின் உச்சமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக நாராயணசாமி அறிவித்தார். இதையடுத்து கிரண்பேடி பாதுகாப்பை தீவிரப்படுத்தினார். கடந்த 4.1.2021 முதல் 18.2.2021 வரையிலான 44 நாட்களுக்கு ஆளுநர் மாளிகை மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள பிற சாலைகளிலும் தடுப்புகள் அமைத்ததோடு, ஆர்ஏஎப், சிஐஎஸ்எப் ஆகிய பிரிவுகளின் காவலர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பணிக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருந்தது.
இதுபற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்களை பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது: பாதுகாப்பு பெயரில் 44 நாட்கள் ஆன செலவு பற்றி ஆர்டிஐ மூலம் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் 11.2.2021 அன்று தகவல் கேட்டதற்கு அவர்கள் எந்த தகவலும் தரவில்லை. இதனால் 18.3.2021 அன்று, முதல்தடவை மேல்முறையீடு செய்யப்பட்டது. அவர்களும் தகவல் தராததால் 12.4.2021 அன்று, புதுடெல்லி தலைமை தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்தேன். மத்திய தகவல் ஆணையம் 25.5.2022 அன்று தலைமை செயலக வளாகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு அழைத்து அறிவிப்பு அனுப்பியது. இதன்பின்பு காவல்துறை தலைமையக எஸ்பி மத்திய தகவல் ஆணையத்திற்கு இதன் விவரங்களை அனுப்பிவிட்டு, எனக்கு கடித நகலை அனுப்பினார்.
அதில் உள்ள தகவலின்படி, மத்திய சிஐஎஸ்எப் ஒரு கம்பெனி காவலர்களுக்கு ரூ.28.42 லட்சமும், இவர்களின் போக்குவரத்திற்கு பிஆர்டிசி பேருந்துக்கு வாடகை ரூ.39.95 லட்சமும், கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைத்ததற்கு ரூ.2.87 லட்சமும் என்ற தகவல் அளித்திருந்தாலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆர்ஏஎப் 2 கம்பெனி காவலர்களுக்கு செலவு செய்த ரசீது இதுவரை அனுப்பவில்லை என தகவலில் கூறினர். இந்த இரண்டு கம்பெனிக்கும் சுமார் ரூ.56.84 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதன் மூலம் பாதுகாப்பு பணிக்கு மட்டுமே ரூ.1.28 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவருகிறது. புதுச்சேரி அரசு கடும் நிதி நெடுக்கடியில் உள்ள நிலையில், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் அறிவித்த உடனே, போராட்டத்தை கட்டுப்படுத்த புதுச்சேரியிலேயே உருவாக்கப்பட்ட ஐஆர்பிஎன் மற்றும் ஆயுதப்படை காவலர்களை பயன்படுத்தாமல், மத்திய பாதுகாப்பு படையினரை அழைக்க வேண்டிய அவசியம் என்ன...? போராட்டத்தால் அசாதாரண சூழ்நிலை ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லாத போது மத்திய பாதுகாப்பு படையினரை அழைக்க உத்தரவிட்டது யார்...? என விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய உள்துறை செயலருக்கு புகார் அளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்