மின் ஊழியர்கள், அதிகாரிகளின் பணிக்கு சட்டபூர்வ பணி பாதுகாப்பு வழங்கப்படும் - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிக்கு சட்டபூர்வ பணி பாதுகாப்பு வழங்கப்படும் - துணை நிலை ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக புதுவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மின் துண்டிப்பை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது புதுவையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து பேசினார். உடன் தலைமை செயலாளர், மின்துறை செயலாளர் இருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் முதலமைச்சரை சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பில் நூலகம், மருத்துவமனை மற்றும் உலகத் தமிழ் மாநாடு சம்பந்தமாக பேசியதாகவும், மேலும் மின் துறை தனியார் மையத்தால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிக்கு சட்டபூர்வ பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தனியார் டெண்டரில் இருந்து பின்வாங்க முடியாது என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். லாபத்தில் இயங்கக்கூடிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறையைத் தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததில் அவர் பெற்ற நல்ல பெயரை முதல்வர் ரங்கசாமி இழக்க நேரிடும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கி வரும் அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஆரம்பகட்ட வேலையை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியது. இதை கண்டித்து புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கினர். அதன் மூலமாக புதுச்சேரி அரசின் இந்த நடவடிக்கையைக் கைவிடக் கோரி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர்.
தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம்,' என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதியை ஏற்று சில நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனர். இந்நிலையில் மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் கோரப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கவும், விநியோகத்தில் நூறு சதவீத பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலதாரர்கள் ரூ. 5.90 லட்சம் செலுத்த வேண்டும். வங்கி செக்யூரிட்டியாக ரூ. 27 கோடி இருக்க வேண்டும். இந்த முன்மொழிவுக்கான கோரிக்கை வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி இறுதிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிராக புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், மின்சார பராமரிப்பு ஊழியர்கள் என புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.