குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 - ஆளுநர் தமிழிசை ஓப்புதல்
புதுச்சேரி: அரசின் எந்த உதவியும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஆளுநர் தமிழிசை ஓப்புதல்
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று அரசின் எந்த உதவியும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் பணிகள் தொடங்கின.
இந்தநிலையில் குடும்ப அட்டை, ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு இதுவரை அரசின் எந்தவித உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளின் விவரம் சேகரிக்கப்பட்டது. சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் பயன்பெறுபவர்கள் பட்டியலை கொண்டும், ஆதார் எண் விவரங்களை கொண்டும் எந்தவித உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளின் பட்டியல் கண்டறியப்பட்டது. புதுவையில் இதில் சுமார் 17 ஆயிரம் குடும்ப தலைவிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்தனர். இந்தகோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. கோப்புக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறுகையில்...
அரசின் எந்தவித உதவித்தொகைகளும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அதற்கான கோப்பு அரசிடம் உள்ள விவரங்களை வைத்து தயாரித்து முதல்வரின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதில் முதல்கட்டமாக 17 ஆயிரம் குடும்ப தலைவிகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் அரசிடம் விண்ணப்பிக்கலாம். அவர்களது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு விடுபட்டவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இதில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த திட்டத்தை தொடங்கிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்