வெள்ளிக்கிழமையில் பெண்கள் காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் - புதுச்சேர் முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி: வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் வெறிநாய்க்கடி ஒழிப்பு பற்றிய செயல் திட்டம் வகுப்பது சம்மந்தமான இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத் துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆளுநர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
காசநோயை ஒழிக்க அத்தனை முயற்சியும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதுவரை 27 ஆயிரம் பேருக்கு எக்ஸ்ரே எடுத்துள்ளோம். காசநோயை ஒழிக்க மற்ற மாநிலங்களைவிட வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு 2 மணி நேரம் வேலையில் சலுகை தர கோரிக்கை வைத்தேன். அதை முதல்வர் ஏற்றுள்ளார். தற்போது அரசு துறையில் அமலாகும். வெள்ளிக்கிழமை காலையில் பணி நேரத்தில் சலுகை தந்துள்ளார். வேலைபற்றி வேறு மாதிரி சொல்லிக்கொண்டிருக்கும் போது, புதுச்சேரியில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ரூ.1,000 செல்வ சலுகையும், நேர சலுகையும் தரப்படுகிறது. இதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். பெண்கள் ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் பணி பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் இது செயல்படுத்துவதாக கருத்து தான் சொன்னேன். முதல்வர், அமைச்சர்கள் பேசிதான் புதுச்சேரியில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
முதல்வர் ரங்கசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வீடு சுத்தப்படுத்துவது உள்பட பல பணிகள் வெள்ளிக்கிழமை இருக்கும். அதனால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் பணிநேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும். காலை 9 மணிக்கு பதிலாக 11 மணி என்று பணிமாற்ற கோப்புக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்