நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு, முள்செடிகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு - விவசயிகள் எச்சரிக்கை
பருவநிலை மாற்றத்தினால் பல இடங்களில் நெற்பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம்: 2 மாத காலத்திற்குள் ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் முள்செடிகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக கூறினார்கள்.
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) சந்திரசேகர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:- தளவானூர் அணைக்கட்டு உடைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதன் பிறகு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து சேதமடைந்தது.
இந்த 2 அணைக்கட்டுகளையும் புதியதாக கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தோம். இதில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை புதியதாக கட்ட அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால் முதலில் உடைந்த தளவானூர் அணைக்கட்டை புதியதாக கட்ட ஏன் இன்னும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் அணைக்கட்டுக்கு வரும் வெள்ளநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. எப்போது இந்த அணைக்கட்டை கட்டுவீர்கள். விரைந்து அரசிடம் இருந்து நிதி பெற்று புதியதாக அணைக்கட்டை கட்டித்தர வேண்டும்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்
எல்லா நீர்நிலைகளில் இருக்கும் முட்செடிகளை அகற்ற வேண்டும். குறிப்பாக ஏரிகளில் உள்ள முட்செடிகளை அகற்றாததால் ஏரிக்கு வரும் தண்ணீரை அந்த முட்செடிகள் பெருமளவில் உறிஞ்சுகிறது. அதோடு காட்டுப்பன்றிகள், அந்த ஏரிகளில் இருக்கும் முட்செடிகளுக்குள் குடியிருந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. ஆகவே ஏரிகளில் இருக்கும் முட்செடிகளை உடனே அகற்ற வேண்டும். அதேநேரத்தில் ஏரிகளில் இருக்கிற ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும். ஒவ்வொரு குறைகேட்பு கூட்டத்திலும் இதை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இன்னும் 2 மாத காலத்திற்குள் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடருவோம் என்று விவசாயிகள் ஆவேசமாக பேசினர். உடனே அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
நெற்பயிரில் பூச்சிநோய் தாக்குதல்
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், பட்டா மாறுதல் வழங்குவதில் பல இடங்களில் பிரச்சினைகள் இருக்கிறது. இதற்கு அதிகாரிகள் தீர்வு காண்பதே இல்லை. பட்டா மாறுதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம். நல்ல அதிகாரிகளை பயன்படுத்தி உடனுக்குடன் பட்டா மாறுதல் செய்து கொடுங்கள். பருவநிலை மாற்றத்தினால் பல இடங்களில் நெற்பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இக்கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார்கள் தமிழ்செல்வி, மகாதேவன், செந்தில், கண்ணன், விழுப்புரம் குடிமைப்பொருள் தனி தாசில்தார் தயாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை பொறுத்தவரை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள்தான் முக்கியமாக வர வேண்டும். ஆனால் இந்த துறை அதிகாரிகள் யாரும் ஏன் கூட்டத்திற்கு வரவில்லை. உயர் அதிகாரிகள் வராவிட்டால் எங்கள் கோரிக்கைகளை யாரிடம் சென்று தெரிவிப்பது, அதற்கு எப்படி அதிகாரிகள் தீர்வு காணப்போகிறார்கள். விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் என்பது வெறும் சம்பிரதாயத்திற்காகவே நடக்கிறது. ஆகவே இக்கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது அதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.