குட் நியூஸ் மக்களே... இனி No Tension; ரூ 23.50 கோடியில் மல்டி ஸ்பெஷலிட்டி ரயில் நிலையம் - எங்கு தெரியுமா ?
ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் மூலம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூபாய். 23.50 கோடியில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் : ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகர்கோவில் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் ரூ.515 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
விழுப்புரம் (Viluppuram), ஒரு 'சிறப்பு நிலை நகராட்சி ' ஆகும். இதுவே விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. 1993 ஆம் ஆண்டில், முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் 'விழுப்புரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நகரம், திருச்சி – சென்னை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-இன் மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் - தூத்துக்குடி சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38-இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது.
ரூபாய். 23.50 கோடியில் ரயில் நிலையம் மறுசீரமைப்பு
ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகர்கோவில் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் ரூ.515 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் விழுப்புரம், புதுச்சேரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த ரயில்வே துறையின் ‘அம்ரித்பாரத்’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூபாய். 23.50 கோடியில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ரயில் நிலையத்தில் 4 லிப்டுகள் அமைக்கப்பட்டு, அதில் 1, 4-ம் நடைமேடைகளில் லிப்ட் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 2,3-வது நடைமேடைகளுக்கு சேர்த்து ஒரு லிப்ட், 6 வது நடைமேடைக்கு ஒரு லிப்ட் அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய காவல் நிலையம்
விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த ரயில்வே காவல் நிலைய பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக ரயில் நிலைய முதல் நடைமேடையில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரயில் நிலைய முகப்பு பகுதிகளில் பூங்கா வசதிகளுடனும், நகரப்பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும் 2 நுழைவாயில்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களைப் போல் போதிய இடவசதிகளுடன் கூடிய பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் பயணிகளுக்கு தெரியும் வகையில் இந்த பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டுதல், நகரும் நடை மேடைகள், பயணிகள் தகவல் காட்சி அமைப்பு, பொது அறிவிப்பு அமைப்பு, சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது பயணிகளுக்காக குளிர்சாதன வசதியுடன் தங்கும் ஓய்வறையும் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 கட்டணம்
இதில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கி ஓய்வெடுக்கலாம். இந்த குளிர்சாதன அறையில் ஓய்வெடுக்க பயணி ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 கட்டணம், டீலக்ஸ் கழிப்பறைக்கு ரூ.2 கட்டணம், 24 மணி நேரத்திற்கு பயணிகள் தங்கள் லக்கேஜை பாதுகாப்பாக வைக்க ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையம் கடந்த 2022-23-ம் ஆண்டில் 54.71 லட்சம் பயணிகளுக்கு தனது சேவையை வழங்கி ரூ.38 கோடியே 29 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது. இந்த புதிய பொலிவால் விழுப்புரம் ரயில் நிலையம் மேலும் சிறப்பான சேவையை வழங்கி வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

